இரணியல் அருகே மாயமான அ.தி.மு.க. நிர்வாகி மர்மமரணம்

இரணியல் அருகே மாயமான அ.தி.மு.க. நிர்வாகி மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகுமார்.
சிவகுமார்.
Published on

இரணியல்:

இரணியலை அடுத்த திங்கள்நகர் பெரியாபள்ளி ரோட்டைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 37). தச்சு தொழிலாளியான இவர் அ.தி.மு.க. இளைஞர் பாசறை பேரூர் செயலாளராகவும் இருந்தார்.

கடந்த 22-ந்தேதி வீட்டை விட்டு வெளியேச் சென்ற சிவகுமார் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுபற்றி சிவகுமாரின் தாயார் இரணியல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகுமாரை தேடி வந்தனர்.

இந்தநிலையில் இன்று நெய்யூர் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டி அருகே ஆண் பிணம் ஒன்று தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர். அவர்கள் இதுபற்றி இரணியல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் கோபி தலைமையிலான போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரித்தனர். ஏற்கனவே அ.தி.மு.க. நிர்வாகி சிவகுமார் காணாமல் போய் இருந்ததால் அவராக இருக்குமோ என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. எனவே அவர்கள் சிவகுமாரின் உறவினர்களை வரவழைத்தனர். அவர்கள் வந்து பார்த்ததில் இறந்து கிடந்தது சிவகுமார் தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

சிவகுமார் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தாலும் அவரது சாவில் மர்மம் இருக்கலாம் என உறவினர்கள் சந்தேகப்பட்டனர். இதுபற்றி அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த சிவகுமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com