ஆட்சிக்கு எதிராக போராடிவரும் மக்கள் மீது ஒடுக்குமுறை: ஈரான் அரசுக்கு டிரம்ப் கண்டனம்

ஈரான் நாட்டில் அரசுக்கு எதிராக போராடிவரும் மக்களின் மீது ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துள்ள ஆட்சியாளர்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆட்சிக்கு எதிராக போராடிவரும் மக்கள் மீது ஒடுக்குமுறை: ஈரான் அரசுக்கு டிரம்ப் கண்டனம்
Published on

ஈரான்:

ஈரான் நாட்டு மக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை உரிமைகளை கேட்டும், ஊழலுக்கு எதிராக போராடியும் வருகின்றனர். அரசுக்கு எதிராக நாடு முழுவதிலும் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. 

கடந்த 2009-ம் ஆண்டு அந்நாள் ஆட்சியாளர்களை எதிர்த்து வீதியில் இறங்கி போராடிய மக்களை அரசு இரும்புக்கரம் ஒடுக்கிய நாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தின் இறுதியில் அங்குள்ள மக்களில் ஒரு பிரிவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வகையில், எட்டாவது ஆண்டாக தற்போது நடைபெற்றுவரும் மக்கள் போராட்டம் மிகப்பெரிய அளவில் எழுச்சி பெற்றுள்ளது. அவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். ஆனால், அமைதியான வழியில் போராடி வரும் அவர்களை அந்நாட்டு அரசு சிறையில் அடைத்து வருகிறது.

கடந்த வியாழக்கிழமை நாட்டின் வட-கிழக்கு பகுதியில் உள்ள மாஷாட் நகரில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக உருவெடுத்தது. தலைநகர் டெஹ்ரானில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் இடையில் மோதல் வெடித்தது. 

நாட்டின் சில பகுதிகளில் அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. வங்கிகளும் தாக்குதலுக்குள்ளானதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. மூன்று நாட்களாக நடைபெற்றுவரும் இந்த போராட்டத்தில் இருவர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. 

போராட்டக்காரர்களை ஒடுக்க பெருமளவில் அரசுப் படைகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் மீதான அரசின் அடுக்குமுறைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, இன்று அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ஒடுக்குமுறை ஆட்சிகள் என்றுமே நிலைத்ததில்லை. ஈரான் மக்களின் பேச்சுரிமையை தடை செய்ய கூடாது. அவர்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். தங்களது விருப்பத்தை அவர்கள் தேர்ந்தெடுப்பதற்கான ஒருநாள் வரும். இந்த உலகம் பார்த்து கொண்டிருக்கிறது’ என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள ஈரான் நாட்டு உள்துறை அமைச்சகம், போராட்டத்தை கைவிடவில்லை என்றால் இரும்புக் கரம் கொண்டு அரசு ஒடுக்கும். இதற்கு முன்னர் எப்போதும் தந்திராத விலையை அவர்கள் தர வேண்டி இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.#tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com