

பாக்தாத்:
ஈரானில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற வழக்கில் அமீர்ஹுசைன் புர்ஜாபருக்கு(17) மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த சிறுவன் கைது செய்யப்படும் போது அவருக்கு 16 வயதே ஆனது. அதனால் அவனுக்கு மரண தண்டனை கொடுக்கக்கூடாது என கூறப்பட்டது.
ஆனால், புர்ஜாபர் குற்றம் செய்யும் போது அவரின் மனநிலை நன்கு முதிர்ச்சியடைந்தே இருந்தது. அவர் தான் அறிந்து தான் அந்த தவறை செய்துள்ளார். அதனால் அவருக்கு மரண தண்டனை வழங்கப்படலாம் என உச்சநீதிமன்றம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தண்டனையை உறுதி செய்தது.
இந்நிலையில், 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கக் கூடாது என்பதால் புர்ஜாபரின் தண்டனையை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.
'சிறுவர்களுக்கு மரண தண்டனை கொடுப்பது சர்வதேச சட்டங்களின்படி குற்றமாகும். அதையும் மீறி ஈரானில் அத்தகைய தண்டனை நிறைவேற்றப்படுகிறது' என மனித உரிமை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் ஈரானில் இது போன்று பல சிறுவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.