

10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. கடந்த 5-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியின் ‘லீக்’ ஆட்டங்கள் இன்றுடன் முடிகிறது.
2 முறை கோப்பையை வென்ற ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக ‘பிளேஆப்’ சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்று இருந்தது. டெல்லி, குஜராத், பெங்களூர் ஆகிய அணிகள் ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டன.
2 முறை சாம்பியனான காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சுமித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட், நடப்பு சாம்பியனான வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத், மேக்ஸ்வெல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 4 அணிகள் இடையே போட்டி நிலவியது.
நேற்று நடந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியதால் 17 புள்ளியுடன் ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறியது. மற்றொரு ஆட்டத்தில் கொல்கத்தா அணி 9 ரன்னில் மும்பையிடம் தோற்றது. இந்த தோல்வியால் கொல்கத்தாவுக்கு சிக்கல் இல்லை. ரன்ரேட் +0.641 ஆக இருப்பதால் அந்த அணியும் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது.
மும்பை இந்தியன்ஸ் 10 வெற்றி, 4 தோல்வியுடன் 20 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தை பிடித்தது.
‘பிளேஆப்’ சுற்றுக்கு நுழையும் 4-வது அணி புனேயா? பஞ்சாப்பா? என்பதில் போட்டி நிலவுகிறது. இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இரு அணிகளும் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி ‘பிளேஆப்’ சுற்றுக்குள் நுழையும். தோற்கும் அணி வெளியேற்றப்படும்.
புனே அணி 8 வெற்றி, 5 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. ரன்ரேட்டில் -0.083 என்ற நிலையில் மிகவும் மோசமாக இருப்பதால் அந்த அணி பஞ்சாப்பை கண்டிப்பாக வீழ்த்த வேண்டும். இல்லையென்றால் வெளியேற்றப்படும்.
தொடக்கத்தில் தடுமாறிய புனே அணி பின்னர் சுதாரித்து ஆடியது. தொடர்ச்சியாக 4 போட்டியில் வென்ற அந்த அணி கடந்த ஆட்டத்தில் டெல்லியிடம் தோற்றதால் தற்போது நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது.
புனே அணியில் கேப்டன் சுமித், திரிபாதி, ரகானே, ஸ்டோக்ஸ், டோனி, மனோஜ் திவாரி போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். ‘பிளேஆப்’ சுற்றில் நுழைய கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் வெற்றி பெற அவர்கள் கடுமையாக போராடுவார்கள். பஞ்சாப் அணி தொடர்ந்து சிறப்பாக ஆடி வருவதால் புனே அணிக்கு இந்த ஆட்டம் சவாலாக இருக்கும்.
பஞ்சாப் அணி 7 வெற்றி, 6 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. புனே அணியை கண்டிப்பாக வீழ்த்த வேண்டும். ரன்ரேட்டில் (+0.296) நல்ல நிலையில் இருப்பதால் புனேயை வென்றால் அந்த அணி ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.
தொடர்ச்சியாக 2 ஆட்டங்களில் அதிரடியாக விளையாடி வென்று பஞ்சாப் அணி ‘பிளேஆப்’ வாய்ப்பில் நீடித்து வந்தது. அதே அதிரடியுடன் புனேயை தோற்கடித்து ‘பிளேஆப்’ சுற்றுக்குள் நுழையும் ஆர்வத்துடன் உள்ளது. கேப்டன் மேக்ஸ்வெல், விருத்திமான் சகா, வோரா, குப்தில், ஷான் மார்ஷ், அக்ஷர் பட்டேல் போன்ற சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் உள்ளனர்.
இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளும் 3 முறை மோதிய போட்டியில் பஞ்சாப் 2 ஆட்டத்திலும், புனே ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.