

சிம்லா:
இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லா அருகே உள்ள கோத்காய் பகுதியில் பள்ளி மாணவி ஒருவர் கடந்த ஜூலை மாதம் 4-ந் தேதி காணாமல் போனார். அவர் அங்குள்ள காட்டு பகுதியில் கற்பழித்து, கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
சிறுமியை கற்பழித்துக் கொன்றது தொடர்பாக ராஜேந்தர்சிங், சூரஜ்சிங் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸ் காவலில் இருந்த போது சூரஜ்சிங் கடந்த ஜூலை 18-ந்தேதி இறந்து போனார். அவரை மற்றொரு குற்றவாளியான ராஜேந்தர்சிங் அடித்துக் கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
போலீஸ் விசாரணையில் கைதி கொல்லப்பட்டது தொடர்பாகவும், சிறுமி கற்பழித்து கொல்லப்பட்டது தொடர்பாக உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரி சிம்லாவில் மிகப் பெரிய போராட்டம் நடந்தது.
இது தொடர்பாக இமாச்சல பிரதேச ஐகோர்ட்டில் சி.பி.ஐ. விசாரணை கேட்டு வழக்கு தொடரப்பட்டது. கோர்ட்டும் சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்தது. இதை தொடர்ந்து சி.பி.ஐ. இது குறித்து விசாரணை நடத்தியது.
சிறுமி கற்பழிப்பு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு குழுவின் ஐ.ஜி. ஜகுர் சைதியை மாநில அரசு வேறு பொறுப்புக்கு மாற்றியது.
இந்த நிலையில் போலீஸ் விசாரணையில் கைதி இறந்தது தொடர்பாக சி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை எடுத்தது. போலீஸ் ஐ.ஜி. ஜகுர் சைதி, டி.எஸ்.பி. மனோஜ் ஜோஷி உள்பட 8 போலீசாரை கைது செய்தனர். ஆதாரங்களை அழித்தது உள்பட அவர்கள் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்து இருந்தது.
கைதான 8 பேரும் சிம்லா கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். வருகிற 4-ந்தேதி வரை அவர்களை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தர விட்டது.