சிறப்பு வசதிகளைப் பெற ரூ.2 கோடி லஞ்சம்: பெங்களூர் சிறையில் விசாரணைக் குழு ஆய்வு

சிறையில் சிறப்பு சலுகை பெற ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக வெளியான புகாரையடுத்து விசாரணை அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழு இன்று பெங்களூரு சிறையில் ஆய்வு செய்தனர்.
சிறப்பு வசதிகளைப் பெற ரூ.2 கோடி லஞ்சம்: பெங்களூர் சிறையில் விசாரணைக் குழு ஆய்வு
Published on

பெங்களூரு:

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலாவுக்கு பெங்களூங் பரப்பன அக்ரஹார சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்க சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் ரூ. 2 கோடி லஞ்சம் வாங்கியதாக டி.ஐ.ஜி. ரூபா குற்றம் சாட்டினார். சசிகலா இருந்த சிறையில் விதிமுறை மீறல்கள் நடந்ததாகவும் அவர் குற்றம் சாட்டி இருந்தார்.

இதைத் தொடர்ந்து சசிகலாவுக்கு ஜெயிலில் 5 அறைகளை ஒதுக்கி கொடுத்தது வெளிச்சத்துக்கு வந்தது. அந்த 5 அறைகளினுடைய வீடியோ படங்கள் கன்னட சேனல்களில் ஒளிபரப்பப்பட்டன. நேற்று நைட்டியுடன் சசிகலா கையில் பையுடன் சிறைக்குள் நடந்து செல்வது போலவும் அவரது அருகில் இளவரசியும், பெண் சிறை அதிகாரி அனிதாராய் நடந்து செல்வது போலவும் வீடியோ வெளியானது.

சிறையில் சசிகலாவுக்கு செய்து கொடுக்கப்பட்ட வசதிகள் பற்றிய வீடியோ ஏற்கனவே வெளியானதால் அவருக்கு செய்து கொடுக்கப்பட்ட வசதிகள் ரத்து செய்யப்பட்டன.

சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ. 2 கோடி லஞ்சம் வாங்கிய விவகாரத்தையும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் நடந்த விதிமுறை மீறல்கள் குறித்தும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் அவர் கர்நாடக தலைமை செயலாளர் மற்றும் கர்நாடக உள்துறை செயலாளர் சுபாஷ் சந்திரா மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினார்.

கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் வெளியிட்ட 16 பக்க அறிக்கை டி.ஐ.ஜி. ரூபா கர்நாடக அரசிடம் தாக்கல் செய்த 2 அறிக்கைகள் ஆகியவற்றை கேட்டு வாங்கினார். பெங்களூர் சேஷாத்திரி ரோட்டில் உள்ள சிறைத்துறை டி.ஜி.பி. மற்றும் டி.ஐ.ஜி. அலுவலகங்களுக்கு நேரில் சென்று அங்கிருந்த முக்கிய ஆவணங்களை பார்வையிட்டார். அதன்பிறகு அங்கு கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்திருந்த காட்சிகளையும் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் பரப்பன அக்ரஹார சிறை பெண் அதிகாரி அனிதாராயை அழைத்து ஒரு மணிநேரம் விசாரணை நடத்தினார்.

கன்னட தனியார் சேனல்களில் சசிகலா, முத்திரைத்தாள் மோசடி மன்னன் தெல்கி, துப்பாக்கி வடிவில் கேக் வெட்டிய கைதியான ரவுடி சீனிவாஷ் ஆகியோரது வீடியோ வெளியாகி இருந்தது. அந்த வீடியோ காட்சிகளை விசாரணை அதிகாரி வினய்குமார் வாங்கி ஆய்வு செய்தார்.

அப்போது அந்த வீடியோ காட்சிகள் அனைத்தும் வீடியோ கேமராவில் பதிவு செய்யாமல் செல்போனில் பதிவு செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. செல்போனில் பதிவு செய்தது யார் என்று கர்நாடக உளவு பிரிவு போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே விசாரணை அதிகாரி வினய்குமார் இன்று பிற்பகல் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். சசிகலா தொடர்பான வீடியோவை எடுத்தது யார் என்றும் விசாரணை நடத்தினார். அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களையும் அவர் ஆய்வு செய்தார். அதன்பிறகு அவர் சசிகலா, இளவரசி மற்றும் பாதுகாவலர்களிடம் விசாரணை நடத்தலாம் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com