போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓட முயன்ற விசாரணை கைதியை மடக்கி பிடித்த போலீசார்

ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓட முயன்ற விசாரணை கைதியை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மடக்கி பிடித்தனர்.
போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓட முயன்ற விசாரணை கைதியை மடக்கி பிடித்த போலீசார்
Published on

ஆலங்குளம்:

ஆலங்குளம் பகுதியில் சமீபகாலமாக ஆடு திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தன. இதுதொடர்பாக ஆலங்குளம் போலீஸ் நிலையத்துக்கு புகார்கள் வந்தது.

இதையடுத்து ஆடு திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை ஆலங்குளம் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி வந்த ஒரு வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் பாவூர்சத்திரம் அருகே உள்ள கல்லூரணியை சேர்ந்த தங்கசெல்வம் (வயது 19) என்பதும், ஆடு திருட்டு வழக்கில் தொடர்புடையவர் என்றும் தெரியவந்தது.

இதையடுத்து தங்கசெல்வம் எந்தெந்த பகுதியில் ஆடுகள் திருடினார்? வேறு எங்கும் இவர் மீது வழக்குகள் உள்ளதா? திருடப்பட்ட ஆடுகளை எங்கு விற்றார்? என விசாரிப்பதற்காக அவரை ஆலங்குளம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு தங்கசெல்வத்திடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் ஆலங்குளம் பகுதியில் ஆடுகள் திருடியதை தங்க செல்வம் ஒப்புக்கொண்டார். மேலும் திருடப்பட்ட ஆடுகளை தனது நண்பர்கள் 2 பேரிடம் கொடுத்து வைத்திருப்பதாக கூறினார். இதையடுத்து நண்பர்கள் 2 பேரையும் அடையாளம் காட்டுமாறு போலீசார் கூறினர். அதற்கு சம்மதித்த தங்கசெல்வம் போலீசாருடன் வந்து அடையாளம் காட்டுவதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து தங்கசெல்வத்தை ஒரு காரில் அழைத்து செல்ல போலீசார் திட்டமிட்டனர். இதற்காக காரை போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தி காரில் ஏறுமாறு கூறினர். அப்போது தங்கசெல்வம் காரில் ஏறுவதுபோல் நடித்து அங்கிருந்து தப்பியோடினார். இதை சற்றும் எதிர்பாராத போலீசார் தங்கசெல்வத்தை பின்னால் துரத்தினர். உடனே அவர் அங்குள்ள குளத்துக்குள் ஓடினார். பின்னால் போலீசாரும் துரத்தினார்கள். இதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு உதவியாக தங்கசெல்வத்தை விரட்டினார்கள்.

ஏராளமான பொது மக்கள் கூடியதால் அவரால் வேறு இடத்துக்கு தப்பிச்செல்ல முடியவில்லை. குளத்துக்குள் போலீசாரும், பொதுமக்களும் சேர்ந்து அவரை மடக்கி பிடித்தனர். இந்த சம்பவம் ஆலங்குளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தங்கசெல்வத்திடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com