

சென்னை:
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி விசாரணையை தொடங்கிய நீதிபதி ஆறுமுகசாமி ஜெயலலிதாவின் உறவினர்கள், உடன் வசித்தவர்கள், சிகிச்சை அளித்த டாக்டர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் சம்மன் அனுப்பி அவர்களிடம் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.
முதலில் ஜெயலலிதா கைரேகையில் சந்தேகம் எழுப்பிய தி.மு.க. மருத்துவ அணியைச் சேர்ந்த டாக்டர் சரவணன் விசாரணை கமிஷனில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
தொடர்ந்து ஜெயலலிதாவிடம் கைரேகை வாங்கிய அரசு டாக்டர் பாலாஜி மற்றும் அரசு ஆஸ்பத்திரி டீன், மருத்துவத் துறை அதிகாரிகள், அரசு டாக்டர்களிடம் விசாரணை நடந்தது.
பின்னர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது சகோதரர் தீபக் மற்றும் தீபாவின் கணவர் மாதவன் ஆகியோருக்கு நீதிபதி ஆறுமுகசாமி சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்தினார்.
அடுத்த கட்டமாக பெங்களூர் சிறையில் இருக்கும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைவர் பிரதாப் சி.ரெட்டி, அவரது மகள் பிரீத்தா ரெட்டி மற்றும் அப்பல்லோ டாக்டர்கள் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
அப்பல்லோ டாக்டர்கள் 10 நாளில் விளக்கம் அளிக்கவும் சசிகலா 15 நாளில் பதில் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
இப்போது டி.டி.வி.தினகரன், இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோருக்கும் நீதிபதி ஆறுமுகசாமி சம்மன் அனுப்பி உள்ளார்.
இவர்கள் 3 பேரும் தங்களிடம் இருக்கக்கூடிய ஆதாரங்கள் அனைத்தையும் 7 நாட்களுக்குள் ஒப்படைக்குமாறு சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூங்குன்றனிடம் 2016 ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை போயஸ் தோட்டத்தில் வேலை பார்த்தவர்களின் விவரம், தொலைபேசி எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் ஒப்படைக்க சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
கிருஷ்ணபிரியா, ஜெயலலிதா சிகிச்சை வீடியோ தொடர்பாக பல்வேறு முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையில் 2-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அப்பல்லோ டாக்டர் சத்யபாமா 4-ந் தேதி ஆஜராகவும், சென்னை மருத்துவ கல்லூரி துணைத்தலைவர் பேராசிரியர் டாக்டர் சுதா சேஷய்யன் 3-ந் தேதி ஆஜராகவும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
அடுத்து இளவரசியின் மகன் விவேக், போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டர் சிவக்குமார் ஆகியோருக்கும் சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
டாக்டர் பாலாஜி ஏற்கனவே ஆஜராகி இருந்த நிலையில் வருகிற 5-ந்தேதி தனது விளக்கத்தை எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்ய உள்ளார்.