

மாநிலங்களுக்கு இடையேயான 59-வது தேசிய தடகள போட்டி உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று தொடங்கியது. தொடக்க நாளில் தமிழ்நாடு ஆதிக்கம் செலுத்தியது. பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் முதல் 3 இடங்களையும் தமிழக வீராங்கனைகள் பிடித்து முத்திரை பதித்தனர்.
அர்ச்சனா சுசிந்திரன் 23.39 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். ரேவதி 23.59 வினாடியில் கடந்து வெள்ளிப் பதக்கமும், தனலட்சுமி 24.22 வினாடியில் கடந்து வெண்கல பதக்கமும் பெற்றனர்.
5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை சூர்யா 17 நிமிடம் 51.88 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் லட்சுமணன் தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 14 நிமிடம் 34.30 வினாடியில் கடந்தார்.
பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தமிழநாடு தடகள சங்க செயலாளர் சி.லதா வாழ்த்து தெரிவித்து உள்ளார்.