

புதுடெல்லி:
கடந்த 3 நாட்களுக்கு முன்பு காஷ்மீர் மாநிலம் புல்வாமா போலீஸ் குடியிருப்புக்குள் புகுந்த 3 தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். அதில் 8 போலீசார் பரிதாபமாக இறந்தனர். இந்த வருடத்தில் நடந்த மிகப் பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது.
இத்தாக்குதலில் பாகிஸ்தானின் ஐ.எஸ்-இ. முகமது தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளது. உளவுத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்கள் கடுமையான ஆயுத பயிற்சிக்கு பிறகு மவுலானா மசூத் ஆசாத் தலைமையில் காஷ்மீருக்குள் ஊடுருவியுள்ளனர்.
கடந்த ஆகஸ்டு 16-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை பல்வேறு கால கட்டங்களில் 15-க்கும் மேற்பட்டோர் ஊடுருவியுள்ளனர்.
அவர்களில் 8 பேர் பஞ்சாப் மற்றும் ஐம்மு காஷ்மீரில் பதுங்கியுள்ளனர். அவர்கள் அங்குள்ள ராணுவ முகாம்கள் மற்றும் போலீஸ் நிலையங்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு பதன்கோட் விமானப்படை தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் போன்ற பெரிய அளவில் இருக்க வேண்டும் என கருதி அதற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்கண்ட தகவல்கள் உளவுத்துறைக்கு கிடைத்துள்ளன. இதனால் எச்சரிக்கையுடன் இருக்கும்படி காஷ்மீர், பஞ்சாப் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளளது. அதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே காஷ்மீருக்குள் ஊடுருவிய தீவிரவாதிகளில் 3 பேர் மட்டுமே வெளியேறி புல்வாமா போலீஸ் குடியிருப்புக்குள் புகுந்து தற்கொலை தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.