

திருச்சி:
தஞ்சை மாவட்டம் சூலமங்கலத்தை சேர்ந்த ராஜா, தனது மனைவி உஷாவுடன் கடந்த 7-ந்தேதி திருச்சி திருவெறும்பூர் பெல் ரவுண்டானா அருகே சென்ற போது, அங்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
ஹெல்மெட் அணியாமல் வந்த ராஜாவை நிறுத்திய போது அவர் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த காமராஜ், பின்னாலேயே துரத்தி சென்று ராஜாவின் மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்தார். இதில் ராஜாவும் உஷாவும் தடுமாறி கீழே விழுந்தனர். பலத்த காயமடைந்த உஷா சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் காமராஜை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் இன்ஸ்பெக்டர் காமராஜ், ஜாமீன் கேட்டு திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது மக்கள் அதிகாரம் அமைப்பினர், உஷாவின் கணவர் ராஜா, வக்கீல் சங்கத்தினர் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர்.இதையடுத்து காமராஜின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி லோகேஸ்வரன் உத்தரவிட்டார்.
இதனிடையே உஷா மரணத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 24 பேரில் 23 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஒருவர் ஜாமீனுக்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யாததால் விடுவிக்கப்படவில்லை. #tamilnews