ஜெயலலிதா சிகிச்சை வீடியோ ஆதாரங்களைப் பெற விசாரணை கமிஷன் நடவடிக்கை எடுக்கும்

ஜெயலலிதா சிகிச்சையின் போது எடுத்த வீடியோ ஆதாரங்களைப் பெற விசாரணை கமிஷன் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.
ஜெயலலிதா சிகிச்சை வீடியோ ஆதாரங்களைப் பெற விசாரணை கமிஷன் நடவடிக்கை எடுக்கும்
Published on

சென்னை:

ஜெயலலிதா சிகிச்சையின் போது எடுத்த வீடியோ ஆதாரங்களைப் பெற விசாரணை கமிஷன் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.

சந்தேகத்துக்கு இடமான முக்கிய பிரமுகர்களின் மரணம், மக்களை அதிகம் பாதித்த சம்பவங்கள் போன்றவற்றில் விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடத்துவதற்கு அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. ஜல்லிக்கட்டுக்காக சென்னை மெரினா கடற்கரையில் நடந்த போராட்டத்தின் இறுதி நாளில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை கமிஷனை அமைத்து சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு உத்தரவிட்டது.

ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதியன்று உடல்நிலை குறைவால் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதில் இருந்தே, அவரது உடல்நிலை பற்றிய சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வந்தன. கடந்த டிசம்பர் 5-ந் தேதியன்று ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு, அதுபற்றி விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் கோரிக்கைகள் விடப்பட்டன.

பொதுவாக நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கும்போது, அதற்கான நிபந்தனைகளை அரசு நிர்ணயிக்கும். குறிப்பிட்ட சம்பவத்தை என்னென்ன விவகாரங்களை விசாரிக்க வேண்டும்? எவ்வளவு நாளுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும்? அரசுக்கு எப்போது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்? என்பது போன்ற நிபந்தனைகளை அரசு நிர்ணயிக்கும்.

ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டிருந்த நோயின் தன்மை, அதற்கு அளிக்கப்பட்ட மருந்துகள் என்னென்ன, இறுதி கட்டத்தில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் ஆகிய விபரங்கள் குறித்தும் விசாரிக்க வேண்டுமா என்பதையும் அரசு முடிவு செய்யும்.

ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து அவர் மரணம் அடைந்த நாள் வரை நடந்த சம்பவங்கள் அனைத்தும் நீதிபதி விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்று தெரிகிறது. எனவே லண்டன் டாக்டர் பீலே, அப்பல்லோ டாக்டர்கள், எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், தமிழக அரசு டாக்டர்கள், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறைக்குச் சென்று வந்த நர்சுகள், உறவினர்கள், நட்பு வட்டாரத்தினர் ஆகியோர் விசாரணை கமிஷனுக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்படுவார்கள்.

அதுமட்டுமல்லாமல், ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவோம் என்று அறிவித்த சசிகலா ஆதரவாளர்கள் மற்றும் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோருக்கும், விசாரணைக் கமிஷன் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதாவை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்க்கும்வரை எந்த ஒரு வீடியோவோ, புகைப்படமோ இதுவரை வெளியிடப்படவில்லை, அதுமட்டுமல்ல, ஆஸ்பத்திரிக்குள் அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான புகைப்படம் அல்லது வீடியோ எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மக்களைப் பொறுத்தவரை ஜெயலலிதாவின் மரணம் மர்மமாகத்தான் உணரப்படுகிறது. எனவே இந்த நீதி விசாரணைக்குப் பிறகாவது ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழுமா என்பது தெரியவரும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com