ஈஞ்சம்பாக்கம் அருகே வேலைப்பளுவால் போலீஸ்காரர் தற்கொலை

ஈஞ்சம்பாக்கம் அருகே வேலைப்பளுவால் போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈஞ்சம்பாக்கம் அருகே வேலைப்பளுவால் போலீஸ்காரர் தற்கொலை
Published on

திருவான்மியூர்:

சென்னை நீலாங்கரையை அடுத்த ஈஞ்சம்பாக்கம், தட்கல் நகர் பொதிகை தெருவை சேர்ந்தவர் விஜய ரங்கன். இவரது மகன் பால முருகன் (வயது28). ஐ.டி. முடித்த இவர் போலீஸ் வேலைக்கு சேர்ந்தார்.

அசோக்நகரில் உள்ள போலீஸ் பயிற்சி அகாடமியில் 2 வருடமாக பயிற்சி பெற்று வந்தார். அவருக்கு கம்ப்யூட்டர் டைப் செய்யும் பிரிவில் பணி வழங்கப்பட்டு இருந்தது.

பாலமுருகனுக்கு விடுமுறை கொடுக்காமல் இரவு பகலாக பணி வழங்கப்பட்டது. அதிக வேலைப்பளு காரணமாக அவர் அவதிப்பட்டு வந்தார்.

இதுதொடர்பாக அவர் தனதுதந்தையிடம் கூறி வருத்தப்பட்டார். அவரிடம் தந்தை ஐ.டி.படித்துவிட்டு ஏன் போலீஸ் வேலைக்கு போக வேண்டும்? வேறு ஏதாவது வேலைப்பார்க்கலாம் என்று கூறி சமாதானப்படுத்தினார். இதனால் கடந்த 2 நாட்களாக பாலமுருகன் வேலைக்கு செல்லவில்லை.

நேற்று இரவு உடனே வேலைக்கு வருமாறு பாலமுருகனுக்கு அழைப்பு வந்தது. இதனால் மன உளைச்சல் அடைந்த அவர் மீண்டும் தனது தந்தையிடம் கூறி புலம்பினார். அவர் மகனை சமாதாப்படுத்தினார். ஆனால் பாலமுருகன் ஆறுதல் அடையவில்லை.

இன்று அதிகாலை பாலமுருகன் தனது அறையில் தாயாரின் சேலையை மின்விசிறியில் கட்டி தூக்கில் தொங்கினார். இன்று காலையில் மகனை எழுப்புவதற்காக விஜயரங்கன் அறைக்கதவை திறந்தார். அப்போது மகன் மின்விசிறியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக தூக்கில் இருந்து மகனை இறக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், பாலமுருகன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com