சிறைக்காவலர்கள் தன்னை அடித்து துன்புறுத்தியதாக இந்திராணி முகர்ஜி போலீசில் புகார்

ஷீனா போரா கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி, சிறைக் காவலர்கள் தன்னை அடித்து துன்புறுத்தியதாக போலீசில் இன்று புகாரளித்துள்ளார்.
சிறைக்காவலர்கள் தன்னை அடித்து துன்புறுத்தியதாக இந்திராணி முகர்ஜி போலீசில் புகார்
Published on

மும்பை:

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி(43) பெற்ற மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கடந்த ஆண்டில் கைது செய்யப்பட்டார். மும்பையில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்திராணி ஏற்கனவே நடந்த இரு திருமணங்கள் மற்றும் முன்னாள் கணவர்கள் மூலம் பிறந்த 3 பிள்ளைகள் பற்றிய விவரத்தையும் மறைத்து பீட்டர் முகர்ஜியை மூன்றாவதாக மணந்ததாக கூறப்படுகிறது.

பீட்டர் முகர்ஜிக்கு அவருடைய முன்னாள் மனைவி மூலம் பிறந்த மகன் ராகுலை ஷீனா போரா முறை தவறி காதலித்ததால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கு இந்திராணியின் 2–வது கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷாம் ராய் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இந்த கொலை வழக்கில் இந்திராணி, சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷாம் ராய் ஆகிய 3 பேரையும் மும்பை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மூவரும் மும்பையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்திராணி அடைக்கப்பட்டுள்ள சிறையில் சில நாட்களுக்கு முன்னர் கைதி ஒருவர் உயிரிழந்தார். பலியான கைதியை போலீசார் தான் அடித்து கொன்று விட்டதாக மற்ற அனைத்து கைதிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சூழ்நிலையை பயன்படுத்தி, 200 கைதிகளுடன் இந்திராணி சிறையின் உள்ளே கலவரம் செய்ய முயற்சித்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சி.பி.ஐ நீதிமன்றத்தில் நேற்று விசாரிக்கப்பட்டது.

அப்போது, சிறையில் உள்ள போலீசார் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், பாலியல் ரீதியாக மானபங்கப்படுத்துவோம் என்று மிரட்டுவதாகவும் நீதிபதியிடம் இந்திராணி தெரிவித்தார். இதையடுத்து, இந்திராணிக்கு உரிய மருத்துவ பரிசோதனைகள் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, இது தொடர்பாக புகாரளிக்க இந்திராணிக்கு அனுமதியளித்தனர்.

இந்நிலையில், நீதிமன்றத்தின் அனுமதியதையடுத்து நாகபாதா காவல் நிலையத்தில் இன்று இந்திராணி சிறைக்காவலர்கள் மீது புகாரளித்தார். இதற்கிடையில், இந்திராணிக்கு எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கையின் முடிவில், இந்திராணி முகர்ஜி சிறை அதிகாரிகளால் கொடுரமாக தாக்கப்பட்டது நிரூபணமாகியுள்ளது என்று ஜெஜெ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பரிசோதனை அறிக்கை சிபிஐ நீதிமன்றத்தில் நாளை சமர்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com