

புதுடெல்லி:
மும்பையில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோ நோக்கி நேற்று முன் தினம் 186 பயணிகளுடன் சென்ற ஏர் இன்டிகோவின் A320 ரக ஏர்பஸ் விமானம் நடுவானில் பழுதானது. இதையடுத்து விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. நடுவானில் பறக்கும்போது அடிக்கடி என்ஜின்கள் செயலிழப்பதால் 'A320 நியோ' ரக விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தை தொடர்ந்து இவ்வகை என்ஜின்கள் பொருத்தப்பட்ட ஏர் இன்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான 8 விமானங்கள் மற்றும் ஏர்கோ நிறுவனத்துக்கு சொந்தமான 3 விமானங்கள் என மொத்தம் 11 விமானங்களின் சேவைகளை உடனடியாக நிறுத்துமாறு உள்நாட்டு விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, இன்டிகோ நிறுவனம் நேற்று 47 உள்நாட்டு விமானங்களின் சேவையை நேற்று ரத்து செய்தது.
இந்நிலையில், மூன்றாவது நாளாக இன்று இன்டிகோ நிறுவனம் 33 உள்நாட்டு விமானங்களை ரத்து செய்துள்ளது. இதில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு மாற்று விமானங்களில் பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும், சிரமத்தை பொறுத்துக் கொள்ளுமாறும் இன்டிகோ விமான நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. ஏர்கோ நிறுவனம் 12 விமானங்களை ரத்து செய்துள்ளது.
சென்னையில் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இவை ஐதராபாத், திருவனந்தபுரம், கோவை, செல்லக்கூடியதும் டெல்லி, ஐதராபாத், திருவனந்தபுரத்தில் இருந்து வரக்கூடிய விமானங்களும் ஆகும்.
‘கோ-ஏர்’ நிறுவனம் சென்னையில் இருந்து புறப்படும் ஒரு விமானத்தை ரத்து செய்துள்ளது. #indigo #goair #tamilnews