

இந்திய மகளிர் ஹாக்கி அணி, ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 13 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.
ஆண்கள் ஹாக்கி அணி சாம்பியன் பட்டதை வென்றதை அடுத்து மகளிர் அணியும் வெற்றி பெற்றிருப்பது அனைவரிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பெண்கள் போட்டியை நேரலையில் ஒளிபரப்பு செய்யாததது வருத்தமளிப்பதாக வீராங்கனைகள் கூறியுள்ளனர்.
இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களித்த மோனிகா மாலிக் இதுபற்றி பேசுகையில், 'ஆசிய கோப்பையை கைப்பற்றியது பெருமையாக உள்ளது. ஆண்கள் அணியை அடுத்து நாங்களும் வெற்றி பெற்றுள்ளோம். ஆனால் எங்கள் தொடரின் ஒரு போட்டியை கூட நேரலை செய்யவில்லை. அது எங்களுக்கு ஏமாற்றளிக்கிறது.
போட்டியை நேரலை செய்தால் அதிகப்படியான மக்கள் பார்த்து எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். அதன் மூலம் நாங்கள் நன்றாக விளையாட முடியும்' என கூறினார்.
கோல்கீப்பரான சவிதா புனியா கூறுகையில், 'போட்டிகளை நேரலை செய்யாதது வருத்தமளிக்கிறது. ஆனால் அது எங்கள் போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. போட்டியில் முழு கவனத்துடன் செயல்பட்டோம்' என்றார்.