இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து நாளை தொடக்கம்

ஐந்தாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி நாளை கொல்கத்தாவில் தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா- கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #ISL2018 #ATKvKBFC
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து நாளை தொடக்கம்
Published on

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி 2014-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நாளை கொல்கத்தாவில் தொடங்குகிறது.

இதில் சென்னையின் எப்.சி., அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ், பெங்களூரு எப்.சி., கோவா எப்.சி., புனே சிட்டி, ஜாம்ஷெட்பூர், மும்பை சிட்டி எப்.சி., டெல்லி டைனமொஸ், நார்த்ஈஸ்ட் யுனைடெட் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். உள்ளூர், வெளியூர் என்ற அடிப்படையில் போட்டி நடைபெறும். இதன்படி ஒவ்வொரு அணியும் தலா 18 ஆட்டங்களில் விளையாடும். அதன்படி மொத்த லீக் ஆட்டங்கள் 90 ஆகும்.

லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே- ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்தியாவில் 10 நகரங்களில் போட்டி நடக்கிறது.

கொல்கத்தாவில் நாளை நடக்கும் முதல் லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியான அட்லெடிகோ டி கொல்கத்தா- கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மீதமுள்ள லீக் ஆட்டங்கள், பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி, தேதி, இடம் விவரம் பின்னர் அறிவிக்கப்படுகிறது.

சென்னையை தலைமையிடமாக கொண்டுள்ள சென்னையின் எப்.சி. அணி 3-வது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. பிரேசிலைச் சேர்ந்த மெயில்சன் ஆல்வஸ் தலைமையிலான சென்னையின் எப்.சி. நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களம் இறங்குகிறது.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் கிரிகோரி பயிற்சியாளராக உள்ளார். அவர் கூறும்போது, இந்த முறையும் கோப்பையை வசப்படுத்துவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னையின் எப்.சி. அணியில் இந்தியாவைச் சேர்ந்த ஜெ.ஜெ. லால் பெகுக்லா, முகமது ரபி, தனபால் கணேஷ், ஜெர்மன் பிரீத்சிங், அனிருத் தபா மற்றும் பிரேசில், ஸ்பெயின், நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com