

கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதாலும், அன்னிய முதலீடு குறைந்து வருவதாலும் இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில மாதங்களாகவே சரிவை சந்தித்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. கச்சா எண்ணெய் விலையை அந்நாட்டு அரசு உயர்த்தி உள்ளது. மேலும் இறக்குமதியாளர்கள் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஆகியவை டாலரை அதிகம் வாங்கி குவித்து வருவதாலும் ரூபாயின் மதிப்பில் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த உடனடியாக கூடுதல் நடவடிக்கை எடுக்குமாறு ரிசர்வ் வங்கியை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் இருந்து முதலீடுகளைப் பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கையை ரிசர்வ் வங்கி தொடங்கியது. இதனால் இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைவது சற்று கட்டுப்படுத்தப்பட்டது.