

இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் மொபைல் போன்கள், டிஜிட்டல் கேமரா, மைக்ரோவேவ் ஓவன் மற்றும் தொலைகாட்சி உள்ளிட்ட மின்சாதனங்களுக்கான வரியை 10% முதல் 15% ஆக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை கட்டுப்படுத்தி உள்நாட்டு பொருட்களின் விற்பனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இறக்குமதி வரி உயர்வு பல்வேறு மொபைல் போன் நிறுவனங்கள் குறிப்பாக ஆப்பிள் நிறுவனத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்திய ஸ்மார்ட்போன் சந்தை மதிப்பு 100 கோடி அமெரிக்க டாலர்களாக இருக்கும் நிலையில், புதிய வரி உயர்வு இந்தியாவில் ஆப்பிள் சாதனங்களின் விலையை அதிகரிக்க செய்யும். முன்னதாக ஜி.எஸ்.டி. வரி அமலானதும் ஆப்பிள் நிறுவன சாதனங்களின் விலை குறைந்தது.
மத்திய அரசின் வரி உயர்வு நடவடிக்கை காரணமாக இந்திய மொபைல் நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும். ததற்சமயம் இந்திய மொபைல் போன் நிறுவனங்கள் ஆண்டிற்கு 50 கோடி செல் போன்களை உருவாக்கி வருகின்றனர். இது மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒப்பிடும் போது இருமடங்கு அதிகம் ஆகும்.
2017-ம் ஆண்டில் விற்பனை செய்யப்படும் மொபைல் போன்களில் 10-இல் ஒன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்த மேக் இன் இந்திய திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டது ஆகும். இந்தியாவில் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமாக இருக்கும் சாம்சங் தனது ஸ்மார்ட்போன்களை இந்தியாவிலேயே தயாரிக்கிறது.
தற்சமயம் வரை ஐபோன் SE மாடல்களை மட்டும் இந்தியாவில் தயாரித்து வரும் ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து புதிய மாடல்களை இந்தியாவிலேயே தயாரிக்க மத்திய அரசிடம் வரி சலுகை கோரியிருந்த நிலையில், புதிய வரி உயர்வு அந்நிறுவனத்திற்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும். ஆப்பிள் மட்டுமின்றி இறக்குமதியை நம்பி வியாபாரம் செய்யும் நிறுவனங்களுக்கு புதிய வரி உயர்வு நிச்சயம் நல்ல செய்தியாக இருக்காது.