

இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, தவான் மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறப்பாக விளையாடுவதால் பின் வரிசையில் உள்ள பேட்ஸ்மேன்களுக்கு சரியாக வாய்ப்பு கிடைப்பதில்லை. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்பு வரை இந்த மூன்று பேரும் சிறப்பாக விளையாடினார்கள். இதனால் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கோலி, தவான், ரோகித் சர்மா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பெரும்பாலான போட்டியில் விளையாடாத பின்வரிசை வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக திணறினார்கள். அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் சிறப்பாக விளையாட வேண்டுமென்றால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு அதிக வாய்ப்பு அளித்து அவர்களை தயார் படுத்த வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணி நினைக்கிறது.
லோகேஷ் ராகுல்
இதனால் பல்லேகலேயில் நடைபெற்ற 2-வது போட்டியில் விராட் கோலி 3-வது நபராக களம் இறங்கவில்லை. அவருக்குப் பதிலாக லோகேஷ் ராகுல் களம் இறங்கினார். அடுத்து கேதர் ஜாதவ் களம் இறங்கினார். அதற்குப் பிறகுதான் விராட் கோலி களம் இறங்கினார். இந்த மூன்று பேரும் அடுத்தடுத்து தனஞ்ஜெயா பந்தில் ஆட்டம் இழந்தனர்.
ஆனால் 8-வது விக்கெட்டுக்கு டோனியுடன் களம் இறங்கிய புவனேஸ்வர் குமார் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.
விராட் கோலி தனது ஆர்டரில் களம் இறங்கி விளையாடாததால்தான் விக்கெட் விழ காரணம் என்று விமர்சனம் எழுந்தது. ஆனால், விராட் கோலி இதை மறுத்துள்ளார். நான் 3-வது வீரராக களம் இறங்கியிருந்தாலும் போல்டாகியிருப்பேன் என்று கூறியுள்ளார்.
கேதர் ஜாதவ்
இந்நிலையில் நாளை 3-வது போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வீரர்கள் ஆர்டர் மாற்றி களம் இறக்கப்படுவார்களா? என்ற கேள்வி எழுந்தது.
ஆனால், உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு வரும் போட்டிகளிலும் வீரர்கள் ஆர்டர் மாற்றி களம் இறக்கப்படுவார்கள் என்று இந்திய அணி பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஆர் ஸ்ரீதர் கூறுகையில் ‘‘வரும் போட்டிகளிலும் இதுபோன்று வீரர்களை மாற்று ஆர்டரில் களம் இறக்க இருக்கிறோம். கடந்த போட்டியில் இவ்வாறு வீரர்களை மாற்றி களம் இறக்கியதன் மூலம் சிறந்த பாடத்தை கற்றுள்ளோம் என்று நினைக்கிறேன்.
இந்த தொடருக்கு முன்பே, நாங்கள் 18 மாதங்களுக்குள் அணியை சிறப்பாக கொண்டு வர வேண்டும் என்ற நிலையில் சோதனை செய்து பார்க்க முடிவு செய்தோம். இதில் இருந்து நாங்கள் நல்ல பாடம் கற்றுக் கொண்டு வருகிறோம்.
அகிலா தனஞ்ஜெயா சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். அதில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு இனிவரும் போட்டிகளில் அதே தவறுகளை திரும்ப செய்யமாட்டோம்.
2-வது போட்டியில் கோலி போல்டாகிய காட்சி
மற்ற வீரர்கள் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய வாய்ப்பு கொடுக்க விரும்புகிறோம். ஏனென்றால், லோகேஷ் ராகுல் ஒருநாள் போட்டிகளில் மிடில் ஆர்டர் வரிசையில் பேட்டிங் செய்தது கிடையாது. அதனால் அவருக்கு வாய்ப்பு கொடுக்க விரும்பினோம். இது ஒரு பரிசோதனைதான். ஆனால், இதை நாங்கள் நிறுத்த மாட்டோம்.