

நாளை 3-வது போட்டி பல்லேகலே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா உள்ளது. எப்படியாவது வெற்றி பெற்று தொடரை உயிரோட்டமாக வைக்க வேண்டும் என்று இலங்கை விரும்புகிறது.
2-வது போட்டியில் இலங்கை அணி மெதுவாக பந்து வீசியதற்காக அந்த அணியின் கேப்டன் தரங்காவிற்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கபுகேதரா கேப்டனாக செயல்பட இருக்கிறார். நாளைய போட்டியில் இந்தியாவை வீழ்த்தக்கூடிய திறமை தங்களிடம் உள்ளதாக கபுகேதரா கூறியுள்ளார்.
நாளைய போட்டி குறித்து கபுகேதரா கூறுகையில் ‘‘நாங்கள் திணறிக் கொண்டிருக்கிறோம் என்று நான் நினைக்கவில்லை. அணி வீரர்களுக்குள் நல்ல சூழ்நிலைதான் நிலவி வருகிறது. அனைவரும் ஒன்றிணைந்து விளையாடினால், ஒரு வெற்றியை நம்மால் பெற முடியும். 2-வது போட்டிக்குப் பிறகு எங்களால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. நாங்கள் மிகவும் சிறப்பாக விளையாடினோம்.
ஒரு தடையை நாம் தாண்ட வேண்டும். இதை சுற்றியே எல்லா விஷயங்களும் இருக்க வேண்டும். கடந்த போட்டியில் தோல்வியடைந்தது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால், அந்த தோல்வியை நேர்மறையாக எடுத்துக்கொள்ள வேண்டும். நாங்கள் எதையும் எதிர்மறையாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. நேர்மறையாக எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். வீரர்கள் தோல்வியில் இருந்து மீண்டெழுந்து சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்.