

புதுடெல்லி:
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநிலம் சீன நாட்டின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளன. இருநாட்டு ராணுவ வீரர்களும் எல்லைப் பகுதியில் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சிக்கிம் மாநிலத்தில் உள்ள இந்திய - சீன எல்லைக்கோடு அருகே சீன ராணுவம் அத்துமீறி நுழைந்ததோடு, இரண்டு பதுங்கு குழிகளையும் அழித்ததாக இந்திய ராணுவம் சில தினங்களுக்கு முன்பு குற்றம்சாட்டியது.
ஆனால், எல்லை தாண்டி ஊடுருவியதாக கூறிய இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு சீன ராணுவம் மறுப்பு தெரிவித்தோடு, இந்திய வீரர்கள் தான் எல்லை தாண்டி வந்ததாக கூறியது.
மேலும், இந்தியா தனது ராணுவ படைகளை சீக்கிம் மாநிலத்தின் டங்லாக் பகுதியில் இருந்து திரும்ப பெற வேண்டும் என்றும் 1962-ம் ஆண்டு நடைபெற்ற போரின் படிப்பினைகளை கற்று கொள்ள வேண்டும் என்றும் சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்நிலையில், சீனாவின் சமீபத்திய நடவடிக்கைகளால் கவலை அடைந்துள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அத்துமீறல் நடவடிக்கைகளால் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து இருநாடுகளிடையே சர்ச்சை எழுந்து வருகிறது. சிக்கிம் மாநிலத்தின் டோக்லாம் பகுதியில் சீனா சாலைப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. சீனாவின் சாலைப் பணிகள், இந்தியாவிற்கான பாதுகாப்பு பணிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சீனாவிடம் தெரியப்படுத்தி உள்ளோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக எல்லை பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் அமைதியான தீர்வுகளை எட்ட வேண்டும் என்று சீனா வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.