மெஹுல் சோஸ்கியை ஒப்படைக்க ஆண்டிகுவா அரசிடம் இந்தியா முறைப்படி கோரிக்கை

வங்கிக்கடன் மோசடியில் சிக்கி ஆண்டிகுவாவில் தற்போது வசிக்கும் மெஹுல் சோஸ்கியை ஒப்படைக்க வேண்டும் என இந்தியா அந்நாட்டு அரசிடம் முறைப்படி கோரிக்கை சமர்பித்துள்ளது. #MehulChoksi
மெஹுல் சோஸ்கியை ஒப்படைக்க ஆண்டிகுவா அரசிடம் இந்தியா முறைப்படி கோரிக்கை
Published on

புதுடெல்லி:

குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சிபிஐயில் அளித்த புகாரை அடுத்து, நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோஸ்கிக்கு சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்களில் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சோதனையை அடுத்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. இவர்கள் இருவருக்கும் எதிராக ஜாமினில் வெளிவர முடியாத வாரண்டை மும்பை சிறப்பு கோர்ட் பிறப்பித்துள்ளது. மேலும், இண்டெர்போல் அமைப்பு இருவருக்கும் எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்த மெஹுல் சோஸ்கி கடந்த மாத தொடக்கத்தில் கரீபியன் தீவான ஆன்டிகுவாவுக்கு சென்றுள்ளதாகவும், அங்கு அவர் அந்த நாட்டின் பாஸ்போர்ட் பெற்றுள்ளதாகவும் இண்டெர்போல் அளித்த நோட்டீசுக்கு ஆண்டிகுவா அரசு பதில் தெரிவித்தது. 

மெஹுல் சோஸ்கிக்கு குடியுரிமை வழங்கப்பட்டது தொடர்பான சர்ச்சையில் இந்திய விசாரணை அமைப்புகள் மெஹுல் சோஸ்கிக்கு உதவியதால் ஆண்டிகுவா அரசு குடியுரிமை வழங்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. 

இதற்கிடையே, சோஸ்கியை இந்தியா கொண்டு வருவதற்கு சிபிஐ உள்துறை அமைச்சகத்துக்கு முறைப்படி கோரிக்கை விடுத்தது. உள்துறை அமைச்சகம் இதற்கான கடிதத்தை வெளியுறவு அமைச்சகத்துக்கு அனுப்பியது. 

இந்நிலையில், சோஸ்கியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என ஆண்டிகுவா அரசுக்கு முறைப்படி மத்திய அரசு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com