

நிதாஹாஸ் டி-20 முத்தரப்பு தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று மோதின.
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார். வங்காளதேசத்தின் தமிம் இக்பால், சவுமியா சர்கார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சவுமியா சர்கார் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார், தமிம் இக்பால் 15 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.
அடுத்து வந்த முஷ்பிகுர் ரஹிம் (18), மெஹ்முதுல்லா (1) ஆகியோரை விஜய் சங்கர் வெளியேற்றினார். லித்தோன் தாஸ் 34 ரன்கள் எடுத்து சாஹல் பந்தில் ஆட்டமிழந்தார். சபிர் ரஹ்மான் தாக்குப்பிடித்து விளையாடி 30 ரன்கள் அடிக்க வங்காள தேசம் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது.
இந்தியா தரப்பில் உனத்கட் 3 விக்கெட்டும், விஜய் சங்கர் 2 விக்கெட்டும், ஷர்துல் தாகுர், சாஹல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் இறங்கினர்.
இந்திய அணி 28 ரன்கள் எடுத்திருந்தபோது, ரோகித் சர்மா அவுட்டானார். அவரை தொடர்ந்து ரிஷப் பந்த் களமிறங்கினார். அவர் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி 40 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து சுரேஷ் ரெய்னா இறங்கினார்.
தவானும், ரெய்னாவும் நிதானமாக ஆடினார். தவான் கடந்த ஆட்டத்தில் ஆடியது போல பொறுப்பாக விளையாடினார். இந்த ஆட்டத்திலும் அரைசதமடித்து அசத்தினார்.
அணியின் எண்ணிக்கை 108 ஆக இருக்கும் போது சுரேஷ் ரெய்னா அவுட்டானார். அவர் 27 பந்துகளில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 28 ரன்கள் எடுத்தார்.
அதன்பின் மணீஷ் பாண்டே களமிறங்கினார். இருவரும் நிதானமாக விளையாடினர். அணியின் எண்ணிக்கை 123 ஆக இருக்கும் போது ஷிகர் தவான் அவுட்டானார். அவர் 43 பந்துகளில் 2 சிக்சர், 5 பவுண்டரியுடன் 55 ரன்கள் எடுத்தார். அவரை தொடர்ந்து தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். இருவரும் இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதியில் இந்திய அணி 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இறுதியில் மணீஷ் பாண்டே 19 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 27 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 2 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்டநாயகன் விருது விஜய் சங்கருக்கு வழங்கப்பட்டது.