அரவக்குறிச்சியில் சுயேட்சை வேட்பாளர் தரையில் உருண்டு போராட்டம்

அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு சுயேச்சை வேட்பாளர் தரையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தரையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்ட சுயேட்சை வேட்பாளர் ரமேஷ்.
தரையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்ட சுயேட்சை வேட்பாளர் ரமேஷ்.
Published on

அரவக்குறிச்சி:

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி சார்பில் இர.ரமேஷ் என்பவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இந்தநிலையில் வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் அகர வரிசைப்படி 5-வது இடத்தில் இருந்தது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வேட்பாளர் பட்டியலில் அவரது பெயரின் முதல் எழுத்தான ‘இ’ நீக்கப்பட்டு ரமேஷ் என்று குறிப்பிட்டு 9-வது இடத்தில் இடம் பெற்றிருந்தது.

இதனை கண்டித்து தேர்தல் ஆணையத்திற்கும், அரவக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலருக்கும் கடந்த 4-ந்தேதி ரமேஷ் மனு அளித்திருந்தார். ஆனால் அந்த மனு குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இதனால் வேட்பாளர் பட்டியலில் அகர வரிசைப்படி சரியான இடமான 5-வது இடத்தை தனக்கு கொடுக்குமாறு வலியுறுத்தி, தேர்தல் நடத்தும் அலுவலகமான, அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு தரையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதைக்கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வேட்பாளர் ரமேசை தேர்தல் நடத்தும் அலுவலரான மீனாட்சியிடம் அழைத்து சென்றனர். அங்கு நடந்த பேச்சுவார்த்தையில், இதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி கூறினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து ரமேஷ் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். சுயேச்சை வேட்பாளர் அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு தரையில் உருண்டு போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com