மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கூர்காலாந்து விவகாரம் - அரசு அலுவலகங்கள் மூடல்

மேற்குவங்கத்திலிருந்து பிரிந்து கூர்காலாந்து தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என கூர்கா ஜனமுக்தி மோர்சா கட்சி இன்று முதல் காலவரையறையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளது. இதனால், கடைகள் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன.
மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கூர்காலாந்து விவகாரம் - அரசு அலுவலகங்கள் மூடல்
Published on

மேற்குவங்க மாநிலத்தின் வடக்கு நகரமான டார்ஜிலிங் மலைப் பகுதி மக்கள், தங்கள் பகுதியை மேற்கு வங்கத்தில் இருந்து பிரித்து கூர்காலாந்து உருவாக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். அவ்வப்போது, இது தொடர்பான போராட்டங்களை அப்பகுதி மக்கள் நடத்துவர். இதனையடுத்து, அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபடும்.

இம்முறை, அம்மாநிலத்தில் 10-ம் வகுப்பு வரை வங்கமொழி கட்டாயம் படிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, தனி மாநில விவகாரம் மீண்டும் வெடித்தது. உடனே, அம்மாநில முதல்வர் மம்தா பாணர்ஜி மேற்குவங்க மாநிலத்தின் கோடைக்கால தலைநகராக டார்ஜிலிங் செயல்படும் என அதிரடியாக அறிவித்தார். மேலும், புதிய தலைமை செயலகம் அமைக்கும் பணி 6 மாதத்துக்குள் தொடங்கும் எனவும் தெரிவித்தார்.

அதேபோல், சுமார் 45 ஆண்டுகளுக்குப்பின் அமைச்சரவை கூட்டத்தை டார்ஜிலிங்கில் முதல்வர் மம்தா பானர்ஜி நடத்தினார். இக்கூட்டதில் அவரது அமைச்சரவையில் உள்ள 34 அமைச்சர்கள் பங்கேற்றனர். ஆனால், இந்த கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கூர்க்கா ஜனமுக்தி மோர்சா கட்சித் தொண்டர்கள் முகத்தில் கருப்புத்துணி கட்டி போராட்டம் நடத்தினர்.

அவர்கள் போலீசாரிடம் மோதலில் ஈடுபட்டதால் அங்கு ராணுவம் அனுப்பப்பட்டது. இதனையடுத்து, பிரித்தாளும் அரசியலில் மம்தா ஈடுபடுகிறார் என கூர்க்கா ஜனமுக்தி மோர்சா கட்சி பொதுச்செயலாளர் ரோஷன் கிரி விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், இன்று முதல் கூர்காலாந்து பகுதியில் முழு அடைப்புக்கு அக்கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர். பள்ளி, கல்லூரிகள், நீதிமன்றம், வங்கி ஆகியவை தவிர்த்து மீதமுள்ள அனைத்து மத்திய, மாநில அலுவலகங்களும் அடைக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் முக்கிய இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவர் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com