திருப்பூருக்கு வெளி மாவட்ட தொழிலாளர்கள் வருகை அதிகரிப்பு

2 மாதங்களாக பின்னலாடை துறை இயங்காததால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து வருவாய் இன்றி தவிக்கின்றனர்.
திருப்பூர் ரெயில் நிலையம் வந்தடைந்த வெளி மாவட்டம் மற்றும்  வெளி மாநில தொழிலாளர்கள்.
திருப்பூர் ரெயில் நிலையம் வந்தடைந்த வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள்.
Published on

திருப்பூர்:

திருப்பூரில் உள்நாட்டு, ஏற்றுமதி ஆடை உற்பத்தி மற்றும் ஜாப்ஒர்க் நிறுவனங்கள் ஏராளம் உள்ளன. இந்நிறு வனங்களில் மதுரை, தேனி, நெல்லை,  தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட வெளிமாவட்டங்கள் மற்றும் ஒடிசா, பீகார், மகாராஷ்டிரா, ஜார்கண்ட் போன்ற வெளி மாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

கொரோனா 2-வது அலை உருவானதையடுத்து, கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னலாடை உற்பத்தி துறை இயக்கத்தை நிறுத்தியதையடுத்து, வெளிமாவட்டம், வெளிமாநில தொழிலாளர் ஏராளமானோர் ரெயில் மற்றும் பஸ்சில் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர்.

கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் வந்ததையடுத்து, திருப்பூரில் ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்கள், ஜாப்ஒர்க் நிறுவனங்கள், கடந்த ஜூன் 7-ந் தேதி முதல் மீண்டும் இயக்கத்தை துவக்கின. உள்நாட்டுக்கான ஆடை உற்பத்தி நிறுவனங்கள் கடந்த மாதம் 28-ந்தேதி முதல் 33 சதவீத தொழிலாளருடன் இயங்கி வருகின்றன.

2 மாதங்களாக பின்னலாடை துறை இயங்காததால் பல லட்சம் தொழிலாளர்கள்  வேலை இழந்து வருவாய் இன்றி தவிக்கின்றனர். குடும்ப பொருளாதாரத்தை சரிசெய்ய உடனடியாக பணியில் இணைய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் பஸ் போக்குவரத்து தொடங்கியுள்ளதால் சொந்த ஊர்களில் உள்ள வெளி மாவட்ட தொழிலாளர்கள் இன்று காலை முதல் திருப்பூர் நோக்கி வரத்தொடங்கியுள்ளனர். ரெயில்கள் தொடர்ந்து இயக்கப்படுவதால் கடந்த இரு வாரங்களாக வெளிமாநில தொழிலாளர்கள் அதிகளவில் திருப்பூர் வந்த வண்ணம் உள்ளனர்.

தொழிலாளர்கள் வருகையால் பின்னலாடை துறை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com