

தமிழகத்தில் சசிகலாவின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் வீடு அலுவலகங்கள், எஸ்டேட்டுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் ஜெயா டிவி அலுவலகத்தில் தொடங்கிய இந்த சோதனையானது, நமது எம்ஜிஆர் அலுவலகம், ஜெயா டிவி தலைமைச் செயல் அதிகாரி விவேக் வீடு, தினகரன், நடராஜன் வீடுகள் மற்றும் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள், கம்பெனி ஊழியர்களின் வீடுகள் என கோடநாடு வரை நீடித்தது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் 187 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பெரும்பாலான இடங்களில் முதல் நாளில் சோதனை நிறைவடைந்தது.
ஜெயா டிவி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர். அலுவலகம் மற்றும் கோடநாடு எஸ்டேட், விவேக் வீடு, மன்னார்குடியில் திவாகரன், தினகரன் வீடுகள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகள், ஜாஸ் சினிமாஸ் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்றும் தொடர்ந்து சோதனை நடத்தினர்.
இன்று மூன்றாவது நாளாக இந்த சோதனை தொடர்கிறது.
கர்நாடக மாநில அ.தி.மு.க. அம்மா அணி செயலாளராகவும், செய்தி தொடர்பாளராகவும் இருப்பவர் புகழேந்தி. பெங்களூரு முருகேஷ்பாளையாவில் உள்ள இவரது வீட்டிலும், கர்நாடக மாநில அ.தி.மு.க. அம்மா அணி அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.