பெண் போலீசை காதலித்து ஏமாற்றிய போலீஸ்காரர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

திருச்சி மாவட்ட ஆயுதப்படை போலீசாக பணியாற்றி வந்த பெண்ணை காதலித்து ஏமாற்றிய போலீஸ்காரர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

திருச்சி:

தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் தஸ்லிம் பானு (வயது 19). இவர் திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவருக்கும், அங்கு பணியாற்றி வந்த போலீஸ்காரர் ராஜசேகர் (28) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர்.

இதனிடையே தஸ்லிம் பானு, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ராஜசேகரிடம் வற்புறுத்தவே, அவர் தஸ்லிம் பானு கழுத்தில் தாலி கட்டியதுடன், விரைவில் திருமணத்தை முறைப்படி பதிவு செய்வதாக கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் திருச்சி சுப்பிரமணியபுரம் இந்திராகாந்தி தெருவில் உள்ள ஒரு வீட்டில் குடித்தனம் நடத்தி வந்தனர். அப்போது இருவரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு பிறகு தஸ்லிம்பானு, திருமணப்பதிவு குறித்து கேட்டபோது, ராஜசேகர் திடீரென மறுப்பு தெரிவித்துள்ளார்.இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த தஸ்லிம்பானு, கடந்த சில நாட்களுக்கு முன்பு எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை மற்ற காவலர்கள் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தஸ்லிம் பானு, திருச்சி திருச்சி சட்டம்- ஒழுங்கு போலீஸ் துணை கமி‌ஷனர் நிஷாவிடம் புகார் அளித்தார். அதில், ராஜசேகர் எனது மதத்தை காரணம் காட்டி திருமணத்தை பதிவு செய்ய மறுத்து வருகிறார். எனவே என்னை காதலித்து ஏமாற்றிய ராஜசேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்த கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசாருக்கு துணை கமி‌ஷனர் நிஷா உத்தரவிட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்தி வேதவள்ளி, போலீஸ்காரர் ராஜசேகர் மீது 406, 493, 506(1), 306, 116 ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையே ராஜசேகர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க போலீசார் பரிந்துரைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com