பேனர் சரிந்து என்ஜினீயர் சுபஸ்ரீ பலி: அதிமுக முன்னாள் கவுன்சிலர் தலைமறைவு

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் சரிந்து விழுந்த விபத்தில் பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ பலியானது தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் தலைமறைவாகியுள்ளார்.
பேனர் சரிந்து விழுந்த விபத்தில் பலியான சுபஸ்ரீ.
பேனர் சரிந்து விழுந்த விபத்தில் பலியான சுபஸ்ரீ.
Published on

சென்னை:

குரோம்பேட்டை நெமிலிச்சேரி பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது ஒரே மகள் சுபஸ்ரீ (வயது 23). கம்ப்யூட்டர் என்ஜினீயர். பெருங்குடி கந்தன்சாவடியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் மதியம் பணி முடிந்து பல்லாவரம் ரேடியல் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது சாலையில் நடுவில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரான மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ஜெயகோபால் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த ‘பேனர்’ காற்றில் சரிந்து சாலையில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ மீது விழுந்தது.

இதில் நிலைதடுமாறிய அவர் ஸ்கூட்டருடன் ரோட்டில் விழுந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி அவர் மீது ஏறி இறங்கியதில் அந்த இடத்திலேயே சுபஸ்ரீ பரிதாபமாக இறந்தார்.

விபத்து குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான பீகாரை சேர்ந்த மனோஜ் (25). என்பவரை கைது செய்தனர்.

அனுமதியின்றி பேனர் வைத்ததாக அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது மாநகராட்சி உதவி பொறியாளர் கமல்ராஜ் பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்தார்.

விபத்து மதியம் 2.30 மணிக்கு நடந்த நிலையில் மாலை 6 மணிக்குதான் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சம்பந்தப்பட்டவர் ஆளும் கட்சி பிரமுகர் என்பதால் எந்த மாதிரியான செக்‌ஷனில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உயர் அதிகாரிகளிடம் கேட்டு அதன்பிறகே வழக்கு பதிவு செய்தனர்.

சம்பந்தப்பட்டவர் கைதானாலும் ஜாமீனில் வெளியே வரக்கூடிய செக்‌ஷனில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது பொது மக்களுக்கு இடையூறு செய்தல் போன்ற பிரிவின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதே சம்பவம் வேறு நபராக இருந்தால் சட்டம் 363 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பார்கள். ஆனால் இங்கு அந்த நடைமுறை கடைபிடிக்கப்படவில்லை.

பேனர் வைத்த ஜெயகோபால் ஆளுங்கட்சி பிரமுகர் என்பதால் அவரை உடனே கைது செய்ய போலீசாரால் முடியவில்லை. இந்த வி‌ஷயத்தில் உயர் அதிகாரிகள் என்ன சொல்வார்களோ என்று தயக்கம் காட்டி வருகின்றனர்.

ஜாமீனில் வரக்கூடிய பிரிவில் வழக்குப்பதிவு செய்திருந்தாலும் இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தாமாகவே முன் வந்து அவசர வழக்காக எடுத்துக் கொண்டு விசாரித்தது.

இதனால் கோர்ட்டுக்கு பயந்து எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற பீதியில் ஜெயகோபால் தலைமறைவாகிவிட்டார். அவரை தேடி வருவதாக தற்போது போலீசார் தெரிவிக்கின்றனர்.

விபத்துக்கு காரணமான பேனரை தயார் செய்த கோவிலம்பாக்கம் சுண்ணாம்பு கொளத்தூர் வினாயகபுரத்தில் உள்ள சண்முகா டிஜிட்டல் பேனர் மற்றும் ஸ்டிக்கர் அச்சகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

இந்த பேனர்களை முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் நேரடியாக சென்று வீதிகளில் வைக்கவில்லை. இதற்காகவே உள்ள காண்டிராக்டரிடம் கொடுத்து வைக்க சொல்லி உள்ளார்.

அந்த காண்டிராக்டர் மின் கம்பத்தில் பேனரை சரியாக கட்டாமல் இருந்துள்ளார். அதனால்தான் காற்றில் கழன்று கீழே விழுந்துள்ளது. இதனால் அந்த காண்டிராக்டரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com