கவரிங் நகையை அடகு வைத்து மோசடி - கள்ளக்காதல் ஜோடி கைது

திருப்பூரில் தனியார் நிதி நிறுவனத்தில் தங்க முலாம் பூசிய கவரிங் நகையை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட கள்ளக்காதல் ஜோடி கைது செய்யப்பட்டது.
கைது
கைது
Published on

திருப்பூர்:

திருப்பூர் 15 வேலம் பாளையம் தண்ணீர் பந்தல் காலனியில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது.

இந்த நிறுவனத்திற்கு நேற்று 15 வேலம் பாளையத்தை சேர்ந்த சுதிர் குமார் (30), அவினாசி அருகே உள்ள செய்யூரை சேர்ந்த லீலாவதி (36) ஆகியோர் ஒன்றாக வந்தனர்.

லீலாவதி தனது கையில் அணிந்திருந்த 2 வளையல்களை நிதி நிறுவன ஊழியர்களிடம் கழற்றி கொடுத்து ரூ. 50 ஆயிரம் பணம் வேண்டும் என கேட்டார்.

வளையல்களை வாங்கிய ஊழியர்கள் அதனை சோதனை செய்தனர். அப்போது அந்த வளையல்கள் தங்கம் அல்ல என்பது தெரிய வந்தது. அந்த வளையல்களில் தங்க முலாம் பூசப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த நிதி நிறுவன ஊழியர்கள் இது குறித்து 15 வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்து சுதிர் குமார், லீலாவதியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

அப்போது அவர்கள் கணவன்-மனைவி இல்லை. கள்ளக்காதல் ஜோடி என்பது தெரிய வந்தது. இருவரும் ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்தபோது கள்ளக்காதல் ஏற்பட்டது தெரிய வந்தது.

வெளியூர்களுக்கு சென்று உல்லாசமாக இருக்க பணம் தேவைப்பட்டதால் வளையல்களுக்கு தங்க முலாம் பூசி அதனை அடகு வைக்க கொண்டு வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் இதே நிதி நிறுவனத்தில் கடந்த 8 மாதத்திற்கு முன் தங்க முலாம் பூசப்பட்ட நகையை அடகு வைத்து ரூ. 45 ஆயிரம் கடன் பெற்றதும் தற்போது விசாரணையில் தெரிய வந்தது.

ஏற்கனவே மோசடி செய்து சிக்காமல் இருந்ததால் தற்போதும் தங்க முலாம் பூசப்பட்ட நகையை அடகு வைக்க வந்து உள்ளனர். ஆனால் சிக்கி கொண்டனர். இவர்கள் மீது இதுபோல் பல்வேறு இடங்களில் மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

கைதான கள்ளக்காதல் ஜோடியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com