

ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில், அதிகளவில் செம்மரம் பரந்து விரிந்து வளர்ந்துள்ளது.
இதை சட்ட விரோதமாக வெட்டிக் கடத்தி சீனா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதை தடுக்க ஆந்திர அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் செம்மரக் கடத்தலை தடுக்க முடியவில்லை.
குறிப்பாக செம்மரக் கடத்தலுக்கு திருவண்ணாமலை, வேலூர், சேலம், தருமபுரி, மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்களே அதிகம் பயன்படுத்தப்படுகிறார்கள்.
இவர்களை அணுகும் செம்மர கடத்தல் கும்பல்கள், மரம் வெட்டுவதற்கு அதிக கூலி தருவதாக ஆசை காட்டுவதாலும், அதிக அளவு முன்பணம் வழங்குவதாலும் போதிய வருவாய் இன்றி தவிக்கும் கூலி தொழிலாளிகள் செம்மரம் வெட்ட ஒப்புக்கொண்டு ஆந்திரா செல்கின்றனர்.
ஆந்திர வனத்துறை அதிகாரிகள் செம்மரம் வெட்டும் கும்பலை வன பகுதிக்குள் நுழையாமல் தடுக்க பல நடவடிக்கைகள் எடுத்தும் பலன் இல்லை.
இதனால் ஆந்திர அரசு செம்மரக் கடத்தலை தடுக்க செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு என்று ஒன்றை உருவாக்கியது. இவர்களுடன் இணைந்து மாநில போலீஸ், வனத்துறையும் இணைந்து செம்மரக் கடத்தலை தடுத்து வருகின்றனர்.
செம்மரம் வெட்டும் கூலி தொழிலாளிகளை போலீசார் பிடிக்க முயலும் போது, இரு தரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டு இருக்கிறது.
அப்போது போலீசாரால் துப்பாக்கி சூடு நடத்தப்படுகிறது. இது போன்ற துப்பாக்கி சூட்டால் பல தொழிலாளிகள் உயிரிழந்து உள்ளனர்.
கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந்தேதி நடத்த துப்பாக்கி சூட்டில் திருவண்ணாமலை, தருமபுரியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் இறந்தனர்.
இதற்கு நீதி விசாரணை வேண்டும் என தமிழக அரசியல் தலைவர்கள் ஒருமித்த குரலில் ஆந்திர அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன் வந்து துப்பாக்கி சூடு குறித்து வழக்கை விசாரித்து வருகிறது.
இதை தொடர்ந்து இது போன்ற சூப்பாக்கி சூடு, கூலி தொழிலாளிகள் கைது என்பது இது வரை தொடர்ந்து நடந்து வருகிறது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் செம்மரம் வெட்டியதாக தமிழகத்தை சேர்ந்த 24-க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கடந்த வாரம் காஞ்சிபுரத்தை சேர்ந்த திருப்பதி சட்டக்கல்லூரியை சேர்ந்த மாணவனை செம்மரக் கடத்தல் வழக்கில் திருப்பதி போலீசார் போலீஸ் நிலையத்தில் உள்ள லாக்அப்பில் அடைத்து 18 மணி நேரம் அடித்து உதைத்து துன்புறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. காந்தாராவ் ஆந்திர அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், கூறியிருப்பதாவது:-
செம்மரக் கடத்தலை தடுக்க போதிய நடவடிக்கை எடுத்தும் கட்டுப்படுத்த முடியவில்லை. செம்மரக் கடத்தலை முற்றிலும் தடுக்க வேண்டும் என்றால் கடத்தல் கும்பல் மீது போலீசார், வனத்துறையினர் எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் விசாரணை நடத்த கூடாது. போலீசார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது.
கடத்தல் கும்பல் மீது நடக்கும் சூப்பாக்கி சூட்டிற்கு விசாரணை இல்லா சட்டம் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.