

புதுடெல்லி:
காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.)- பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
காஷ்மீர் மாநிலத்தில் நடந்த கலவரத்தை தொடர்ந்து இரு கட்சிகள் இடையே முக்கிய பிரச்சினைகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
காஷ்மீர் மக்களுடனான பேச்சுவார்த்தை நிறுத்தி வைப்பு, பிரிவினைவாதிகள் கைது, சிறப்பு அந்தஸ்து ஆகியவற்றில் மெகபூபா முப்திக்கும், பாரதிய ஜனதாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவை ரத்து செய்தால் மாநில மக்கள் யாரும் இந்திய தேசிய கொடியை ஏந்த மாட்டார்கள் என்று முதல்-மந்திரி மெகபூபா முப்தி மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காஷ்மீர் இளைஞர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பது அவசியமானது. கற்களை வீச அவர்களை எது கட்டாயப்படுத்துகிறது. அதற்கு மாற்றாக அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற யோசனையை வழங்க வேண்டும். அந்த ஆலோசனை சிறந்ததாக இருக்வேண்டும். தற்போதைய நிலைமை மிகவும் நம்பிக்கையற்றதாக இருக்கிறது.
தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) நிர்வாக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. உண்மையான பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.
சிலர் தங்களது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக பிரச்சினை இருப்பதாக கூறி அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதை பார்க்க வேண்டும்.
காஷ்மீரில் பிரிவினை வாதிகளை கைது செய்வது மட்டுமே நிரந்தர தீர்வாகாது. மக்களுக்கான வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகளை அதிகரிப்பதே தீர்வாக அமையும்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370-வது சட்ட பிரிவை சேதப்படுத்தும் முயற்சி நடக்கிறது. சிறப்பு சட்டம் 35-’ஏ’வில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முயற்சித்தால் காஷ்மீர் மக்கள் யாரும் இந்திய தேசிய கொடியை கைகளில் ஏந்த மாட்டார்கள்.
இவ்வாறு மெகபூபா முப்தி கூறியுள்ளார்.
காஷ்மீரில் கலவரத்தை தூண்ட தீவிரவாதிகளிடம் இருந்து பிரிவினை வாதிகள் பணம் பெற்றதாக என்.ஐ.ஏ. கண்டுபிடித்து பலரை கைது செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதால் மெகபூபா இந்த மிரட்டலை விடுத்துள்ளார்.