கேவலமாக பேசியதால் திமுக பிரமுகரை வெட்டிக் கொன்றேன்- கைதான பெண்ணின் தந்தை வாக்குமூலம்

மகள் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் வரதட்சணை கேட்டு கேவலமாக பேசியதால் திமுக பிரமுகரை வெட்டிக் கொன்றதாக கைதான பெண்ணின் தந்தை வாக்குமூலம் அளித்துள்ளார்.
கேவலமாக பேசியதால் திமுக பிரமுகரை வெட்டிக் கொன்றேன்- கைதான பெண்ணின் தந்தை வாக்குமூலம்
Published on

பூந்தமல்லி:

குன்றத்தூரை அடுத்த சிறுகளத்தூர் கெலட்டிப்பேட்டை காந்தி தெருவை சேர்ந்தவர் கிரிராஜன் (43). ரியஸ் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். தி.மு.க. பிரமுகரான இவர் சிறுகளத்தூர் ஊராட்சியின் முன்னாள் வார்டு உறுப்பினர் ஆவார்.

நேற்று மதியம் நந்தம்பாக்கம் கருமாரி அம்மன்நகர் அருகே கிரிராஜன் வெட்டி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குன்றத்தூர் போலீசார் கெலட்டிப்பேட்டையை சேர்ந்த பாபு, பழையநல்லூர் கவின்ராஜ், புதிய நல்லூர் கங்காதரன் மற்றும் சதீஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்கள் தவிர சரண், ரவி ஆகிய 4 பேரை தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான பாபு போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த 10 மாதங்களுக்கு முன்பு எனது மூத்த மகள் சவுபாக்கியவதிக்கு விருகம்பாக்கத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் பேசி முடித்தேன். அழைப்பிதழ் கொடுத்து திருமணம் நெருங்கிய நிலையில் காதல் என்ற பெயரில் கொலை செய்யப்பட்ட கிரிராஜனின் மைத்துனர் மோகன் என்பவர் எனது மகளை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார்.

அதில் இருந்தே எனக்கும், என் மகளுக்கும் இடையே சம்பந்தம் இல்லை என்று கூறிவிட்டு அமைதியாக இருந்தேன். ஆனால் கிரிராஜன் என்னை பார்க்கும் போதெல்லாம் கேலி, கிண்டல் செய்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் என்னிடம் வந்து பெண்ணுக்கு தர வேண்டிய நகையை தரும்படி கேட்டார். நான் தரமறுத்து விட்டேன். எனவே என்னை கேவலமாக பேசினார். இதனால் எனது கோபம் அதிகமானது.

எனவே அவரை கொலை செய்ய திட்டமிட்டு வேறு ஒருவர் மூலம் அவரை வரவழைத்தேன். பின்னர் எனது நண்பர்களுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்தேன். என்னை கேவலமாக தகாத முறையில் பேசியதால் வாயில் அரிவாளால் வெட்டினேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.#tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com