

முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அடுத்த ஓவரூர் கிராம் சோதிரியம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி நாகராஜ்(வயது60), அவரது மனைவி இந்திரா(55) தம்பதினர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கணவன் மனைவியான நாகராஜ், இந்திரா ஆகியோர் ஆரம்பத்திலிருந்தே இணைபிரியாத தம்பதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். உறவினர் வீடு நல்லது கேட்டது விசேஷங்களுக்கு எங்கும் சென்றாலும் ஜோடியாக இணைபிரியாமல் சென்று வருவார்களாம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மனைவி இந்திராவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நாகராஜ் மற்றும் உறவினர்கள் சிலர் ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சையளிக்கப்பட்டும் இந்திரா ஆபத்தான நிலையில் இருந்தால் அங்குள்ள டாக்டர்களால் மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்ததையடுத்து இந்திரா திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர் சிகிச்சை அளித்து வந்த நிலையில் இந்திரா சிகிச்சை பலனின்றி கணவர் நாகராஜ் முன்னிலையில் இறந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நாகராஜ் அங்கேயே மயங்கி விழுந்தார். உடன் அங்கு இருந்த டாக்டர் சோதித்து பார்த்தபோது நாகராஜும் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கணவன், மனைவி இருவரது உடலையும் ஓவரூர் கிராமத்தில் உள்ள வீட்டுக்கு கொண்டு வந்து இருவரது உடல்களையும் அருகருகே அஞ்சலிக்காக வைத்தனர். அதன்பின்னர் அங்குள்ள சுடுக்காட்டுக்கு எடுத்து சென்று இருவரது உடலையும் அருகருகே வைத்து உறவினர்கள் இறுதி சடங்கு செய்தனர்.