திருவாரூர் அருகே மனைவியை வெட்டிக்கொன்ற கணவர் தற்கொலை முயற்சி

திருவாரூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தபோது தப்பி ஓடி விட்டார்.
தற்கொலைக்கு முயற்சி
தற்கொலைக்கு முயற்சி
Published on

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே உள்ள வடக்கு தென்பரை வடக்கு தெருவை சேர்ந்தவர் பால்சாமி (வயது 65). விவசாயி. இவருடைய மனைவி மாரியம்மாள் (57). இவர்களுக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 4 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது.

பால்சாமி, மாரியம்மாள் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை அந்த பகுதியில் மாரியம்மாள் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அவரிடம் பால்சாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த பால்சாமி, அரிவாளால் மனைவி மாரியம்மாளை வெட்டிக்கொலை செய்தார்.

ஆத்திரத்தில் மனைவியை வெட்டி விட்டோமே என்ற அதிர்ச்சியில் பால்சாமி பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீஸ் பாதுகாப்புடன் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை மருத்துவ மனையில் இருந்து போலீசாருக்கு தெரியாமல் காம்பவுண்ட் சுவர் ஏறிக்குதித்து பால்சாமி தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பால்சாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com