

சமீபத்தில் ஏற்பட்ட ஹார்வே புயல் காரணமாக அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் பேரழிவை சந்தித்தது. பலரை பலி வாங்கிய இந்த புயல், வெள்ளத்தின் பாதிப்புகள் இன்னும் விலகாத நிலையில், வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் புதிதாக உருவான சக்திவாய்ந்த இர்மா புயல் கரீபியன் நாடுகளை பதம் பார்க்கத் தொடங்கி உள்ளது.
இர்மா புயல் காரணமாக செயின்ட் மார்ட்டின், செயின்ட் பார்தலெமி ஆகிய தீவுகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சுழற்று அடித்த காற்றில் வீடுகளின் கூரைகள் பறந்தன. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மரங்கள் வேருடன் சாய்ந்தன. தெருக்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
செயின்ட் பார்தலெமியில் தீயணைப்பு வாகனங்கள் வெளியே செல்ல முடியாத அளவுக்கு தீயணைப்பு நிலையத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அருகில் உள்ள குவாதலூப் தீவின் ஒரு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.