

நியூயார்க்:
வடக்கு அட்லாண்டிக் கடலில் புதிதாக உருவாகியுள்ள ‘இர்மா’ புயலால் அமெரிக்காவின் சில பகுதிகளும், கரீபியன் கடல் நாடுகளும் பலத்த பாதிப்பை சந்திக்கும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஏற்பட்ட ஹார்வே புயல் காரணமாக அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. பலர் உயிரிழந்துள்ள நிலையில் கோடிக்கணக்கான மதிப்பில் பொருட்சேதங்கள் நிகழ்ந்துள்ளன. வெள்ளத்தின் பாதிப்புகள் இன்னும் விலகாத நிலையில் தற்போது வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் புதிதாக புயல் ஒன்று உருவாகியுள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
‘இர்மா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், கரீபியன் நாடுகளான ஹைதி, கியூபா, டொமிகன் குடியரசு, புயிட்ரோ ரிகோ ஆகிய நாடுகளை தாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலால் கடலில் மாபெரும் அலைகள் உண்டாகலாம் என்று புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
‘இர்மா’ புயல் எச்சரிக்கையால் புளோரிடா மாகாணத்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். மீட்புப்படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.