மனிதர்கள் பூமியில் உயிர் வாழ வனம், வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டும் - வன உயிரின விழாவில் அதிகாரி அறிவுறுத்தல்

வனம், வன விலங்குகள் உயிர்ச்சூழல் மண்டலத்தில் மிக முக்கியமானது என, வன உயிரின வார விழாவில் தெரிவிக்கப்பட்டது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

உடுமலை:

ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை துணை இயக்குனர் அலுவலகத்தில் வன விலங்கு வார விழா நடந்தது. இதில் துணை இயக்குனர் தேஜஸ்வி பேசியதாவது:

வனம் மற்றும் வன விலங்குகளை காப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 1957-ம் ஆண்டு முதல் வன விலங்கு வார விழா அக்டோபர்  முதல் வாரம் 2-ந்தேதி  முதல் 8-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது.

உயிர்ச்சூழல் மண்டலத்தில் வனம், வன விலங்குகள், மனிதர்கள் என மூன்றும் பிரிக்க முடியாத ஒன்றாகும். இதில் ஒன்று இல்லையென்றாலும் மற்றவை அழிந்து விடும். தமிழகம், மேற்கு தொடர்ச்சிமலை, கிழக்கு தொடர்ச்சிமலை என இரு மலைத் தொடர்களும் ஒருங்கே அமைத்து இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

உதவி வனப்பாதுகாவலர் கணேஷ்ராம் பேசியதாவது:

பறவைகளில் பெரிய அளவிலும், அழகாகவும் காணப்படுபவை இருவாச்சி பறவைகளாகும். ‘ஹார்ன்பில்’ என்ற மரத்தில் மட்டுமே ஆண், பெண் ஜோடியாக வசிக்கும். முட்டையிட்டு குஞ்சு பொறிக்க உயர்ந்த மரத்தின் பொந்தில் அடைகாக்கும்.அப்போது ஆண் பறவை பொந்தை அடைத்து விடும்.

பெண் பறவை தனது இறக்கை உதிர்த்து குஞ்சுகளுக்கு மெத்தை போன்ற அமைப்பை உருவாக்கி விடும். ஆண் பறவை பழம், சிறிய பூச்சிகளை எடுத்து வந்து பெண் பறவைக்கு உணவு கொடுக்கும்.

7 வாரம் அடைகாக்கும் நிலையில் ஆண் பறவை வெளியில் செல்லும் போது வேட்டை, வனத்தீ உள்ளிட்ட காரணங்களினால் கொல்லப்படும் போது பெண் பறவையும் இறந்து விடும்.

வனத்திலுள்ள பறவைகள், விலங்குகள் மட்டுமின்றி பல லட்சக்கணக்கான நுண்ணுயிரினங்களுக்கும் ஆதாரம் என்பதையும், நம் குடும்ப அமைப்பை போன்றே நுண்ணுயிரினங்களுக்கும் உள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.

வனம், வன விலங்குகளை பாதுகாத்தால் இயற்கை சம நிலை தொடரும். மனிதர்கள் பூமியில் உயிர்வாழ முடியும் என்றார். 

X

Maalai Malar
www.maalaimalar.com