ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், கூட்டணிகட்சிகளின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
ஹைட்ரோ கார்பன்
ஹைட்ரோ கார்பன்
Published on

புதுச்சேரி:

அண்ணாசிலையிலிருந்து காமராஜர் சிலை வரை நடந்த மனிதசங்கிலி போராட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, விஜயவேணி, சிவா, வெங்கடேசன், தி.மு.க. வடக்கு மாநில அமைப்பாளர் சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம், முருகன், விடுதலை சிறுத்தைகள் தேவபொழிலன், ம.தி.மு.க. கபிரியேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மனிதசங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு புதுவை மாநிலத்தில் நிலம் மற்றும் கடலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக வேதாந்தா, ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் எனக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இதை எதிர்த்து நான் பிரதமருக்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தினால் விவசாயிகளும், மீனவர்களும் பாதிக்கப்படுவர். சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும். எனவே மக்களுக்கு எதிரான திட்டங்களை எக்காரணத்தை கொண்டும் அனுமதிக்க மாட்டோம் என கடிதம் எழுதினேன். மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர், உங்கள் கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக எனக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து தமிழகம், புதுவையில் பலகட்ட போராட்டங்கள் நடந்து வருகிறது. தற்போது மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறோம்.

எக்காரணத்தை கொண்டும் மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதனால் எந்த விளைவு வந்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். சட்டசபை கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com