ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவோர் மனுதாக்கல் செய்வது எப்படி?

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவோர் மனுதாக்கல் செய்வது எப்படி? இதுகுறித்த செய்தியை விரிவாக கீழே பார்ப்போம்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவோர் மனுதாக்கல் செய்வது எப்படி?
Published on

புதுடெல்லி:

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவோர் மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேர்தல் அதிகாரி அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் வருகிற ஜூலை மாதம் 25-ந் தேதியுடன் முடிவடைவதால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய ஜூலை 17-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

இதைத்தொடர்ந்து முறைப்படியான தேர்தல் அறிவிக்கை கடந்த 14-ந் தேதி வெளியிடப்பட்டது. அன்றைய தினம் மனுதாக்கல் தொடங்கியது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவோர் மனுதாக்கல் செய்வது தொடர்பாக பாராளுமன்ற செயலக உயர் அதிகாரி கூறியதாவது:-

ஜனாதிபதி தேர்தலை நடத்தும் தேர்தல் அதிகாரியாக பாராளுமன்ற செயலாளர் அனுப்மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். வேட்பு மனு தாக்கல் கடந்த 14-ந் தேதி தொடங்கியது. இந்த வேட்பு மனுக்கள் நாடாளுமன்ற கட்டிடத்தின் அறைஎண் 18-ல் வினியோகிக்கப்படுகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட வேட்பு மனுவுடன் அதை முன் மொழியும் மற்றும் வழி மொழியும் மனுக்களுடன் சேர்த்து சம்பந்தப்பட்ட வேட்பாளர் நேரடியாகவோ அல்லது அவரது பிரதிநிதி மூலமாகவோ தேர்தல் அதிகாரியிடம் நேரில் வழங்கலாம்.

அதற்கு முன் ரூ 15 ஆயிரம் டெபாசிட் தொகையை ரிசர்வ் வங்கி கவுன்ட்டர் அல்லது அரசு கருவூலத்தில் செலுத்தி அதற்கான ரசீதை வேட்பு மனுவுடன் வேட்பாளர் இணைக்க வேண்டும். மேலும் வேட்பாளர் சார்ந்த பாராளுமன்ற தொகுதியில் அவர் முறைப்படி வாக்காளராக பதிவு பெற்றுள்ளார் என்பதை நிரூபிக்கும் அத்தாட்சி சான்றிதழையும் வேட்பு மனுவுடன் இணைக்க வேண்டும்.

தேர்தல் அதிகாரி இல்லாத சமயத்தில் உதவி தேர்தல் அதிகாரிகளான பாராளுமன்ற செயலக இணை செயலாளர் ரவீந்திர கரிமெல்லா, இயக்குனர் வினய் குமார் மோகன் ஆகியோரிடம் தினமும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மனுவை அளிக்கலாம்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளரை முன்மொழிந்தும் வழி மொழிந்தும் மக்கள் பிரதிநிதிகள் (எம்.பி.க்கள்) தலா 50 பேர் கையெழுத்திட வேண்டும். இதில் ஒருவர் குறைந்தால் கூட அந்த வேட்பு மனு முறையான ஆவணம் இல்லை எனக்கூறி நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து நேற்று வரை மொத்தம் 16 பேர் மனு தாக்கல் செய்தனர். இதில் 15 பேர் மனு முறையான ஆவணங்கள் இல்லை என்று கூறி நிராகரிக்கப்பட்டது.

மனுக்களை வாபஸ் பெற ஜூலை 1-ந் தேதி கடைசி நாள். அன்று பிற்பகல் 3மணிக்கு முன்னதாக எழுத்து பூர்வமாக நேரிலோ அல்லது அவரை முன்மொழிந்த அல்லது வழிமொழிந்தவர் மூலமாக வேட்புமனுவை திரும்ப பெறலாம். தேர்தலில் போட்டியிருந்தால் ஜூலை 17-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.ஜூலை 20-ந் தேதி வாக்குகள் எண்ணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com