

சென்னை:
சென்னை செங்குன்றத்தில் உள்ள குட்கா குடோன்களில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினார்கள்.
அப்போது குட்கா தயாரிப்பு பங்குதாரர் மாதவராவ் வீட்டில் இருந்து டைரி ஒன்று சிக்கியது. அந்த டைரியில் அரசின் தடையை மீறி குட்காவை விற்பனை செய்வதற்கு போலீசார் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட தகவல்கள் இடம் பெற்றிருந்தன.
2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை அதிகாரிகளில் யார்-யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்று எழுதி வைத்திருந்தனர். மொத்தம் ரூ.39 கோடி லஞ்சமாக கைமாறி இருப்பதை அந்த டைரி மூலம் வருமான வரித்துறையினர் உறுதிப்படுத்தினார்கள்.
இதையடுத்து லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு வருமான வரித்துறை கடிதம் எழுதியது. அதோடு அந்த டைரியில் உள்ள முக்கிய பக்கங்களை நகல் எடுத்து ஆவணங்களைத் தொகுத்து தமிழக அரசிடம் கொடுத்தது.
அந்த ஆவணத்தில்தான் குட்கா விற்பதற்கு லஞ்சம் வாங்கிய அமைச்சர், 2 டி.ஜி.பி.க்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால் இந்த விவகாரத்தில் மேற்கொண்டு எந்த விசாரணையும் நடத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டு விட்டது.
கடந்த டிசம்பர் மாதம் இதுபற்றிய தகவல்கள் அம்பலத்துக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து குட்கா விற்பனை செய்வதற்காக லஞ்சம் வாங்கியவர்கள் பற்றி விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ஆனால் அரசு தரப்பில் இதுபற்றி முதலில் கூறப்பட்ட போது தங்களுக்கு வருமான வரித்துறையிடம் இருந்து எந்த ஆவணங்களும் வரவில்லை என்றனர். ஆனால் வருமான வரித்துறையினர், ஆவணங்கள் கொடுத்ததை தேதி வாரியாக குறிப்பிட்டு உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து அந்த ஆவணங்கள் மாயமாகி விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது அனைவரிடமும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பிரச்சினை விசுவரூபம் எடுத்ததைத் தொடர்ந்து குட்கா ஊழல் பற்றி விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கடந்த மே மாதம் விசாரணையை தொடங்கினார்கள்.
லஞ்ச ஊழல் ஒழிப்பு போலீசார் 2 பிரிவாக பிரிந்து இந்த விசாரணையை மேற்கொண்டனர். ஒரு பிரிவினர் லஞ்சம் கைமாறியது பற்றியும் மற்றொரு பிரிவினர், வருமான வரித்துறை கொடுத்த ஆவணங்கள் மாயமானது பற்றியும் விசாரித்தனர். அதன் அடிப்படையில் இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
அதில் 17 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. குட்கா ஊழலில் பரபரப்பாக பேசப்பட்ட அமைச்சர் மற்றும் 2 டி.ஜி.பி.க்களின் பெயர்கள் இடம் பெறவில்லை. இது அனைத்துத் தரப்பினரிடமும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குட்கா ஊழல் விவகாரத்தில் அமைச்சரையும் 2 போலீஸ் உயர் அதிகாரிகளையும் காப்பாற்ற திட்டமிட்டு எப்.ஐ.ஆர். தயாரிக்கப்பட்டு இருப்பதாக தி.மு.க., பா.ம.க. கண்டனம் தெரிவித்துள்ளன.
இதற்கு பதில் அளித்த லஞ்ச ஊழல் ஒழிப்பு துறை அதிகாரி ஒருவர், “இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் யாரையும் தப்பவிட மாட்டோம்” என்றார். இதைத் தொடர்ந்து முதல் தகவல் அறிக்கையில் மேலும் சிலரது பெயரை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள 17 பேர் பட்டியலில் இரண்டே இரண்டு போலீசாரின் பெயர்கள்தான் உள்ளன. மற்றபடி சுங்க துறை, வணிகத்துறை, மாநகராட்சி, உணவுப் பாதுகாப்பு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பெயர்களே அதிகம் உள்ளன.
லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட போலீஸ் அதிகாரிகளில் ஒரு டி.எஸ்.பி. பெயரும், ஒரு இன்ஸ்பெக்டர் பெயரும் மட்டுமே உள்ளது. ஆனால் செங்குன்றம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள 30 போலீசார் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. எனவே முதல் தகவல் அறிக்கையில் மேலும் சில போலீசார் பெயரை சேர்க்க லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.
இதற்கிடையே வருமான வரித்துறை அதிகாரிகள் கொடுத்த ஆவணங்கள் மாயமானது பற்றிய விசாரணையை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை சார்பில் ஆவணங்கள் கொடுக்கப்பட்ட போது தலைமை செயலாளராக ராமமோகன ராவ், போலீஸ் டி.ஜி.பி.யாக அசோக்குமார் இருந்தனர்.
தற்போது அவர்கள் இருவரும் அந்த பதவிகளில் இல்லை. இருவருமே ஓய்வு பெற்று விட்டனர். வருமான வரித்துறையினர் ஆவணங்கள் கொடுத்த போது இவர்கள் வசம் அவை இருந்ததாக கூறப்படுகிறது.
எனவே ஆவணங்கள் மாயமானது பற்றி ராமமோகன ராவ், அசோக்குமார் இருவரிடமும் விசாரிக்க லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த விசாரணைகள் முடிந்த பிறகு குற்றப்பத்திரிகை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே குட்கா ஊழல் தொடர்பாக சிலரை அதிரடியாக கைது செய்வது பற்றியும் ஆலோசனை நடந்து வருகிறது.
இதன் காரணமாக குட்கா விற்பதற்கு ரூ.39 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் மீண்டும் புயல் வீசத் தொடங்கியுள்ளது.