

நெல்லை:
மேலப்பாளையம் ஆண்டவர் தெருவை சேர்ந்தவர் காடை அபுபக்கர். இவருக்கு சொந்தமான வீடு ஆமீன்புரம் 5-வது தெருவில் உள்ளது. அந்த வீடு கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. சமீபத்திய மழையில் அந்த பழைய வீடு சேதம் அடைந்தது.
ஆகையால் அந்த வீட்டை இடித்து விட்டு புதிதாக கட்டிடம் கட்ட அபுபக்கர் முடிவு செய்தார். அதன்படி அந்த வீட்டை இடிக்கும் பணியை இன்று தொடங்கினார். அந்த பணியில் மேலப்பாளையம் ஆமீன்புரம் 7-வது தெருவை சேர்ந்த கோதர் மைதீன் (வயது21) என்ற வாலிபர் ஈடுபட்டிருந்தார்.
அவர் வீட்டின் மீது ஏறி நின்று எந்திரம் மூலம் சுவரை உடைத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென சுவர் இடிந்ததால் மேலே நின்ற கோதர் மைதீன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவர் மீது சுவர் விழுந்து அமுக்கியது. இதனால் இடிபாடிகளில் சிக்கி படுகாயம் அடைந்த கோதர் மைதீன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சம்பவ இடத் திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்பு போலீசார் விரைந்து வந்து கோதர் மைதீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மேலப் பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.