

திண்டுக்கல்:
திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா கார்குடி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 32). இவர் சேலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பழனிசாமி, தனது செல்போனில் இருந்து மற்றொரு செல்போன் எண்ணுக்கு ‘மிஸ்டுகால்’ கொடுத்தார். அந்த ‘மிஸ்டுகால்’ திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயதான 11-ம் வகுப்பு மாணவியின் பெற்றோர் செல்போனுக்கு வந்தது.
அப்போது வீட்டில் பெற்றோர் இல்லாததால் மாணவி, செல்போனை எடுத்து பார்த்தார். பின்னர் ‘மிஸ்டுகால்’ வந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். உடனே எதிர்முனையில் பேசிய ஓட்டல் ஊழியர் பழனிசாமி, மாணவியிடம் நைசாக பேச்சு கொடுத்து பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டார். இதற்கிடையே திடீரென ஒருநாள் மாணவியை நேரில் பார்ப்பதற்காக பழனிசாமி வந்தார்.
மேலும் மாணவியை நேரில் சந்தித்த அவர், தன்னுடன் வரும்படி அழைத்தார். அதற்கு மாணவி மறுக்கவே, அவரை மிரட்டி சேலத்துக்கு கடத்தி சென்றார். அங்கு திருமணம் செய்து கொள்வதாக கூறி மாணவிக்கு, அவர் தாலி கட்டினார். பின்னர் பழனிசாமி, மாணவியை பலவந்தமாக கற்பழித்துள்ளார். இதனால் பயந்து போன மாணவி, தன்னை ஊருக்கு அழைத்து சென்று விடும்படி கூறி இருக்கிறார்.
ஆனால், திருச்செந்தூர் மற்றும் சென்னை உள்பட பல ஊர்களுக்கு மாணவியை, பழனிசாமி அழைத்து சென்றுள்ளார். அங்கும் அறை எடுத்து தங்கிய போது, மாணவியை கற்பழித்துள்ளார். இறுதியில் சென்னையில் தங்கியபோது மாணவி தனது பெற்றோரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் மாணவியை மீட்டு, சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டல் ஊழியர் பழனிசாமியை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை இருப்பது தெரியவந்தது.
இந்த வழக்கு திண்டுக்கல் மகளிர் கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி புருஷோத்தமன் வழக்கை விசாரித்தார். விசாரணை நிறைவுபெற்ற நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட பழனிசாமிக்கு, மாணவியை கடத்திய குற்றத்துக்கு 4 ஆண்டுகளும், கற்பழித்த குற்றத்துக்கு 10 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்தார். இதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதோடு ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்தார்.