

ஓசூர்:
கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோர் விரைவில் விடுதலையாக வேண்டும் என்று வேண்டி, கிருஷ்ணகிரி மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில், ஓசூர் தர்கா பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியையொட்டி முன்னதாக சசிகலா மற்றும் குடும்பத்தினர் பெயரில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் சுமங்கலி பெண்களுக்கு தேங்காய், பழம், பூ உள்ளிட்ட தாம்பூலம் வழங்கப்பட்டது.
மேலும் பிரசாதமும், பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஓசூர் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே. மாதேவா தலைமை தாங்கினார். இதில், இணை செயலாளர் ஜே.எம்.சீனிவாசன், ஓசூர் அப்பாவு நகர் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் ஆஞ்சினம்மா மாதேவா, மற்றும் அ.தி.மு.க. வட்ட செயலாளர் வீரய்யா, ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.