

ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது.
இந்த சட்ட திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் மசோதா கைவிடப்பட்டது. ஆனாலும், ஹாங்காங்கின் தன்னாட்சியில் சீனா தலையிடுவதை நிறுத்த வேண்டும் என கூறி நான்கு மாதங்களக போராட்டம் நடைபெற்றுவருகிறது.
இதற்கிடையில், சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியின் 70-ம் ஆண்டு கொண்டாட்டங்கள் கடந்த 1-10-2019 அன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அதேவேளையில், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் மீண்டும் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. பல்லாயிரக்கணக்கானோர் முகமூடி அணிந்து கொண்டு சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் முடிந்தது.
போலீசார் தங்கள் அடையாளங்களை கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காக போராட்டக்காரர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு போராடி வருகின்றனர். இப்படி முகமூடிகளை அணிந்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கையை ஹாங்காங் அரசு அறிவித்தது.