காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாதி போலீசில் சரண்

காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாதி தனிஷ் அகமது தாமாக முன்வந்து சரண் அடைந்தார்.
காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாதி போலீசில் சரண்
Published on

ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம் ஹன்ட்வாரா மாவட்டத்தை சேர்ந்தவர் தனிஷ் அகமது. இவர் டேராடூனில் உள்ள விவசாய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பி.எஸ்சி., படித்து வந்தார்.

தனிஷ் அகமது சமூக வலைத்தளம் மூலமாக ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புவைத்து, அந்த இயக்கத்தில் இணைந்தார். கடந்த 2016-ம் ஆண்டு ராணுவ வீரர்கள் மீது கல்வீசிய சம்பவத்தில் தனிஷ் அகமதை போலீசார் கைது செய்து, பின்னர் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். அந்த சம்பவத்துக்குப்பின் மாயமான தனிஷ் அகமது ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாத அமைப்பின் தளபதியான சப்சார் பாத்துடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, அவரது நெருங்கிய கூட்டாளி ஆனார்.

இந்த நிலையில், கடந்த மாதம் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சப்சார் பாத் கொல்லப்பட்டார். அவரது இறுதிச் சடங்கில் வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கியுடன் பயங்கரவாதி ஒருவர் கலந்துகொண்ட வீடியோ பதிவு உள்ளூர் ஊடகங்களில் பரவியது.

அந்த வீடியோவில் இருந்தது தனிஷ் அகமது என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று குப்வாரா மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையம் ஒன்றில் தனிஷ் அகமது தாமாக முன்வந்து சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com