இந்து மக்கள் கட்சி பிரமுகரின் தம்பி கொலை- கடலூர் கல்லூரி மாணவர் கைது

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இந்து மக்கள் கட்சி பிரமுகரின் தம்பி கொலை தொடர்பாக கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட ராமன்
கொலை செய்யப்பட்ட ராமன்
Published on

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தேவா. இவர் இந்து மக்கள் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது தம்பி ராமன் (வயது 34), கட்டிட தொழிலாளி.

கடந்த 14-ந் தேதி ராமன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்பு அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் ராமனை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் உள்ள பணிக்கன்குப்பம் முந்திரி காட்டில் உள்ள ஒரு மரத்தில் ராமன் தூக்கில் பிணமாக தொங்கினார்.

அந்த வழியாக சென்றவர்கள் இதைப்பார்த்து புதுப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து ராமனின் அண்ணன் தேவா போலீசில் புகார் செய்தார். அதில் எனது தம்பி ராமனை யாரோ கடத்தி அடித்து கொலை செய்துவிட்டு பிணத்தை மரத்தில் தூக்கில் தொங்க விட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.

புகாரின் பேரில் குற்றவாளிகளை பிடிக்க கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் கடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் குமாரய்யா தலைமையில் தனிப்படை அமைக்கபட்டது.

தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ராமனின் செல்போனை கைபற்றிய போலீசார் அதில் இருந்து யாருக்கு ராமன் அதிகமாக பேசியுள்ளார் என்ற தகவல்களை சேகரித்தனர்.

அப்போது பண்ருட்டி மேல்பாதி சொர்ணாவூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரின் எண்ணிற்கு ராமன் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று சந்தோஷ்குமாரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சந்தோஷ்குமாரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ராமனை, சந்தோஷ்குமார் கொலை செய்தது தெரிய வந்தது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறிய தகவல்கள் வருமாறு:-

சந்தோஷ்குமார் கடலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சொர்ணாவூரில் ராமனின் அக்காள் வீடு உள்ளது. அங்கு ராமன் அடிக்கடி வருவார். அவரது அக்காள் மகளும், சந்தோஷ்குமாரும் ஒரே கல்லூரியில் படிக்கின்றனர். இதனால் அடிக்கடி ராமனின் அக்காள் வீட்டுக்கு சந்தோஷ்குமார் சென்றுள்ளார்.

அப்போது ராமனுக்கும், சந்தோஷ்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் இருவரும் அடிக்கடி வெளியில் சென்று ஜாலியாக சுற்றி திரிந்துள்ளனர்.

இந்த நிலையில் சந்தோஷ் குமாரும், ராமனும் ஓரின சேர்க்கை பழக்கத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனால் அவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு வந்தனர்.

அதன் பிறகு ராமன் செல்போன் மூலம் சந்தோஷ்குமாரை தொடர்பு கொண்டு அடிக்கடி ஓரின சேர்க்கைக்கு அழைத்துள்ளார். வரமறுத்தாலும் அவரை தொடர்ந்து ராமன் வற்புறுத்தி வந்துள்ளார். இந்த பழக்கம் வெளியில் தெரிந்து விட்டால் அவமானமாகி விடும் என்பதால் ராமனை கொலை செய்ய சந்தோஷ்குமார் திட்டமிட்டுள்ளார்.

கடந்த 14-ந் தேதி அன்று பணிக்கன்குப்பம் முந்திரி காட்டுக்கு வருமாறு சந்தோஷ்குமாரை, ராமன் அழைத்துள்ளார். உடனே சந்தோஷ்குமார் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி கொண்டு அங்கு சென்றுள்ளார்.

பின்னர் அந்த மதுவில் தூக்க மாத்திரையை கலந்து ராமனுக்கு கொடுத்துள்ளார். அதை வாங்கி குடித்த அவர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து விட்டார்.

அதன் பின்னர் கைலியால் ராமனின் கழுத்தை இறுக்கி சந்தோஷ்குமார் கொலை செய்துள்ளார். அதைத்தொடர்ந்து ராமன் தற்கொலை செய்து கொண்டார் என்பதுபோல் இருப்பதற்காக அவரது உடலில் கயிற்றை கட்டி அங்குள்ள மரத்தில் சந்தோஷ்குமார் தொங்க விட்டுள்ளார்.

மேற்கண்ட தகவல்கள் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து சந்தோஷ்குமாரை போலீசார் கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் நீதிபதி கணேஷ் முன்னிலையில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com