இமாசலபிரதேசத்தில் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் ரூ.12 கோடி மோசடி

இமாசலபிரதேசத்தில் பிரதமரின் விவசாயிகள் நிதிஉதவி திட்டத்தில் ரூ.12 கோடி மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சிம்லா:

சிறு, குறு விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு தலா ரூ.6 ஆயிரத்தை 3 தவணைகளாக வழங்கி வருகிறது. பிரதமரின் விவசாயிகள் நிதிஉதவி திட்டம் என்று இது அழைக்கப்படுகிறது. வருமான வரி செலுத்தும் விவசாயிகள் இத்திட்டத்தில் பலனடைய தகுதியற்றவர்கள் ஆவர்.

இந்தநிலையில், பா.ஜனதா ஆட்சி நடக்கும் இமாசலபிரதேசத்தில் இத்திட்டத்தில் வருமான வரி செலுத்தும் 11 ஆயிரத்து 388 விவசாயிகள் பலன் அடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

12 மாவட்டங்களில் இந்த மோசடி அதிகமாக நடந்துள்ளது. மொத்தம் ரூ.11 கோடியே 95 லட்சத்தை அவர்கள் முறைகேடாக பெற்றுள்ளனர்.

இதையடுத்து, அந்த விவசாயிகளின் வங்கிக்கணக்குகளை மாவட்ட கலெக்டர்களுக்கு மாநில அரசு அனுப்பி வைத்துள்ளது. அந்த கணக்குகளில் இருந்து நிதிஉதவி பணத்தை மீட்குமாறு உத்தரவிட்டுள்ளது. நில பதிவேடுகள் இயக்குனருக்கும் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், 5 மாவட்டங்களில் இதுவரை வெறும் ரூ.17 லட்சத்து 82 ஆயிரம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.

நிதிஉதவி திட்டத்துக்கு விண்ணப்பிக்கும்போது பொய்த் தகவல்களை அளித்ததற்காக, சம்பந்தப்பட்ட விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இனிமேலும் தகுதியற்றவர்கள் பலனடைவதை தடுக்க, இம்மாத இறுதிக்குள் விவசாயிகளின் பட்டியலை இணையதளத்தில் சரிபார்க்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த மோசடி குறித்து மத்திய அரசிடம் மாநில அரசு இதுவரை தெரிவிக்கவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com