ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நிலத்தை மீட்க தனிப்பிரிவை ஏன் தொடங்க கூடாது?- அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நிலத்தை மீட்க தனிப்பிரிவை ஏன் தொடங்க கூடாது? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை ஐகோர்ட்
சென்னை ஐகோர்ட்
Published on

சென்னை:

பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள மச்சிநாயக்கன்பாளையம் கிராமத்தில் தனி நபரால் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டுமானங்கள் மேற்கொள்ள சப்-கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஆக்கிரமிப்பாளர் கோவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை, மாவட்ட அரசு பிளீடர்தாமோதரன் முறையாக நடத்தவில்லை என்று கூறி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் கோவை மாவட்டத்தை சேர்ந்த சுப்பையா புகார் செய்தார்.

இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க பார் கவுன்சிலுக்கு உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன், பொங்கியப்பன் ஆகியோர் விசாரித்தனர்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தவில் கூறியிருப்பதாவது:-

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களுடன், அரசு வக்கீல் கூட்டு சேர்ந்து செயல்பட்டதாக மனுதாரர் கூறுகிறார். எனவே, இந்த சொத்து தொடர்பாக கோவை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கிறோம். அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கவும் தடை விதிக்கிறோம்.

அரசு நிலங்கள், அரசு புறம் போக்கு நிலங்கள் தனி நபர்களால் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டும்.

எனவே, இந்த வழக்கில், தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர், வருவாய் துறை செயலாளர், வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளரை தாமாக முன் வந்து எதிர்மனு தாரர்களாக சேர்த்து உத்தரவிடுகிறோம்.

மேலும், தமிழகம் முழுவதும், மாவட்ட வாரியாக எத்தனை ஏக்கர் அரசு மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன? அதில் எவ்வளவு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது? இந்த நிலங்களை மீட்க தொடரப்பட்ட வழக்குகள் எத்தனை? அதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை?

அதில் எத்தனை வழக்குகளில் அரசுத் தரப்பு முறையாக வழக்கை நடத்தவில்லை? வழக்குகளை முறையாக நடத்தாத அரசுத்தரப்பு வழக்கறிஞர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? தமிழகம் முழுவதும் அரசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பை கண்டறிந்து, அவற்றை மீட்க நடவடிக்கை எடுப்பதற்காக தனி பிரிவை ஏன் துவங்கக் கூடாது?

அரசு நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள் பத்திரப்பதிவு செய்யப்படுவதை தடுக்க, அந்த நிலங்கள் குறித்த விவரங்கள் அனைத்து மாவட்ட பதிவுத்துறைக்கு ஏன் வழங்கக் கூடாது? ஆகிய கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com